ஒரு காமெடியனாக ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவுடன் இணைந்து கலக்கியவர் நகைச்சுவை நடிகர் சூரி. முதல் முறையாக தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை' படத்தின் மூலம் ஹீரோவானார். அதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் சூரிக்கு ஒரு ஹீரோ சான்ஸ் கிடைத்துள்ளது என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


 



 


சிவகார்த்திகேயன் மூன்றாவது தயாரிப்பு :


வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'விடுதலை'. சூரி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது. விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாகிறார் நடிகர் சூரி. கனா, வாழ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும்.


சூரிக்கு ஜோடியாகும் மலையாள நடிகை :


'கூழாங்கல்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்துக்கு 'கொட்டுகாளி' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஹீரோயினாக நடிக்க மலையாள நடிகை அன்னா பென் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் சேவலை மையமாக வைத்து இருக்கக்கூடும் என வெளியாகியுள்ள போஸ்டர் மூலம் யூகிக்கப்படுகிறது. 


சிவகார்த்திகேயன் பேசுகையில் :


இப்படத்தை தயாரிப்பது குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில் " தனது அந்த மண்ணை பற்றி அதன் தன்மை மாறாமல் படமாக்கி அதை சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற வைப்பது என்பது மிகவும் ஒரு பொன்னான தருணம். அந்த வகையில் இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் 'டைகர் அவார்ட்' விருதை வென்றது. மேலும் எனது நெருங்கிய நண்பர் சூரியுடன் இப்படத்தில் இணைவது உற்சாகமளிக்கிறது. திறமையான நடிகை அன்னா பென் இப்படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி' என்றார்.