அரசியல் அமைப்பு சட்டம் உங்களுக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்தை நீங்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பிரபு சங்கர் கூறினார்.


கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  தலைமையில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஊராட்சி மன்ற நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  


 






இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது,


நமது கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் பல்வேறு ஊராட்சிகளில் பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ஒரு அதிகாரத்தை வழங்கியுள்ளது அந்த அதிகாரத்தை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்வது தான் சிறப்பு.  உங்கள் ஊராட்சிக்கு நீங்கள் உண்மையாக தலைமைப் பொறுப்பு ஏற்க வேண்டும். அதுதான் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கனவு.  காலம் காலமாக ஒடுக்கப்பட்ட நபர்களின் வலியை உணர்ந்து இது போன்ற அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அடித்தளத்தில் கட்டடங்களை அமைப்பது உங்கள் கடமையாகும். குறிப்பாக பட்டியல் இன தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் சாதி பாகுபாடு மற்றும் பாலின பாகுபாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.  உங்கள் பணிகள் உங்கள் அதிகாரம் உங்களுக்கு முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும். நீங்கள் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்து விட்டது இன்னும் உள்ள இரண்டு ஆண்டுகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  மக்களால் மக்கள் அதிகாரத்தால் சட்டம் அளித்த அதிகாரம் உங்களிடம் உள்ளது.  அதை நீங்கள் கையில் எடுக்க வேண்டும். 


 


 


 




ஒன்றிய மற்றும் மாநில அரசு பணிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.  பெண் தலைவர்கள் முழுமையாக பணியாற்ற முன்வர வேண்டும்.   அரசியல் அமைப்பு சட்டம் உங்களை தலைவராக்கி அழகு பார்க்கிறது  அதை  நீங்கள் புரிந்து கொண்டு திறம்பட செயல்பட்டு தனித்துவத்துடன் செயல்பட வேண்டும். எளிய முறையில் ஊராட்சிகளை எவ்வாறு நிறுவகிப்பது என்பது தொடர்பாக உங்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.  ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்து கொடுக்க தயாராக உள்ளோம். வீட்டை பராமரிக்கும் பெண்கள் உங்களுக்கு ஊரை பராமரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல நிர்வாகத்தில் உங்கள் கணவர்கள் ஆதரவு அளிக்கலாம் ஆனால் அதிகாரத்தில் தலையிடக்கூடாது.


ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் குறித்து முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  பிரதான வசதியாக முதலில் குடிநீர் எல்லா ஊர்களுக்கும் செல்கிறதா என்பதை கவனிக்க வேண்டும் அதற்கு அடுத்தபடியாக தெருவிளக்கு, கழிவு நீர் வடிகால் வசதி,  சாலை வசதிகள், அங்கன்வாடி, பள்ளி சமையலறைகள் என எவையெல்லாம் முக்கியம் என்பதை அறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் இணைந்து மக்கள் தொகை அடிப்படையில் முன்னுரிமை அடிப்படையில் பணிகளை எடுத்து நிறைவேற்றி உங்கள் தேவையை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தெரிவித்தார். 


 




இந்நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அன்புமணி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.