பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. 'பசங்க-2' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக பாண்டிராஜ் மற்றும் சூர்யா ஒன்றாக இணைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்,பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யாவின் கடைசி இரண்டு படங்களான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இருப்பினும் சூர்யா ரசிகர்களுக்கு படத்தை திரையரங்கில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இதனை போக்கும் விதமாக எதற்கும் துணிந்தவன் படம் வர உள்ளது. சமீபத்தில் சூரரை போற்று திரைப்படம் மதுரையில் சில திரையரங்கில் காட்சிகள் போடபட்டது. ஆனால் இந்தப்படம் கண்டிப்பாக தியேட்டரில் வெளியாகும் என்று குறிப்பிடப்படுகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய சூரி படத்தை பற்றியும் நடிகர் சூர்யா பற்றியும் நிறைய பகிர்ந்துகொண்டார்.
இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூரி, இந்த படத்தில் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார். இயக்குனர் பாண்டியராஜ், அண்ணன் சூர்யாவின் பெயரை அவர் கூறியதும், ரசிகர்கள் விசில் அடித்த கரகோஷத்தை எழுப்பி கத்தத்தொடங்கிவிட்டனர். சற்று அமைதியான சூரி, தன்னுடைய பாணியில், இந்த கத்து கத்துறீங்களே டா எப்படி பேசுறது என்று கலகலப்புடன் பேசினார். சூரியா அண்ணா, அடுத்த படத்திலும் எனக்கு சான்ஸ் கொடுக்க இந்த விசில் சத்தத்தை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். 2022ம் ஆண்டு வெற்றிகரமாக அமைய புஃல் எனர்ஜி உங்களால் எனக்கு கிடைத்து இருக்கு ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என நடிகர் சூரி பேசினார். மேலும் பேசுகையில், "நான் 1999, 2000 ஆம் ஆண்டில் கே டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு அரசியல் நையாண்டி நிகழ்ச்சியில் நடிக்க சான்ஸ் கேட்டு அலைவேன். அப்போது சிறிய சிறிய ரோல்தான் தருவார்கள். ஓரிரு வசனங்கள்தான் இருக்கும் அதையும் சரியாக பேச மாட்டேன். சோதப்பிக்கொண்டே இருப்பேன். இருப்பினும், டைரக்டரிடம் சான்ஸ் கொடுங்க சார் வாடகை கொடுக்கணும் சார்ன்னு சொல்லி சின்ன சின்ன ரோல் வாங்கி பண்ணுவோம். அப்போது எனக்கு சம்பளம் 50 ரூபாய். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சம்பளம் 100, 250, 450, 650 என்று வாங்கியிருக்கேன். ஆனால் அதே சன் டிவி இன்று எனக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து வேலை தந்துள்ளது பெருமையாக உள்ளது." என்று கூறினார்.
நடிகர் சூர்யா அவர்களுடன் நேர்ந்த முதல் சந்திப்பு பற்றி அவரிடம் கேள்வி கேட்டனர். அவர் இந்த திரைப்படத்திற்கு முன்னதாக, அஞ்சான் திரைப்படத்தில் டாக்சி டிரைவராக நடித்துள்ளார். அப்போது அவரை சந்தித்து குறித்து கூறுகையில், "நான் முதன் முதலில் அஞ்சான் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் தான் அவரை நேரில் சந்தித்தேன். படங்களிலெல்லாம் நாம் பார்க்கிறோம் அவர் எப்படி இருக்கிறார் என்று. ஆனால் நேரில் பார்த்து நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன், 'சண்டாளன்… எவ்வளவு அழகா இருக்கான்'. யாரும் தப்பா நெனச்சுக்க வேண்டாம், ஆனா அப்படித்தான் இருந்தது என் ரியாக்ஷன் அவரை பார்த்ததும்." என்றார்.