குறைந்த அளவு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் , தமிழ் சினிமாவின் பல வெற்றிப்படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை சோனியா அகர்வால். இவர் நடிப்பில் , காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. காதல் கொண்டேன் படத்தில் அறிமுமான சோனியா அகர்வால் செல்வராகவன் குறித்தும், தனுஷ் குறித்துமான தனது பார்வையை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் “காதல் கொண்டேன் திரைப்படத்தில் கடினமான பார்ட் அப்படினா அது கிளைமேக்ஸ் சீன் தான் . அந்த சீன்ல நிறைய டேக் எடுத்தோம். நிறைய வெற்றிப்படங்கள் வந்த சமயத்தில்தான் நான் திருமணம் செய்துக்கொண்டேன். கெரியரை விட்டுட்டு திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என தோன்றியதற்கான காரணம், இரண்டு பேருமே காதலித்தோம். என்றோ ஒரு நாள் இப்படி செட்டில் ஆகத்தானே போறோம். அதை இப்போதே செய்துக்கொள்வோம் என தோன்றியது அதனால் திருமணம் செய்துக்கொண்டேன்.செல்வராகவன் நடிப்பில் எனக்கும் தனுஷுக்கும் குரு. அவர் எனக்கு சிறந்த குரு , ரொம்ப கடுமையான குருவும் கூட. காதல் கொண்டேன் திரைப்படத்தில்தான் எனக்கு கெரியர் ஸ்டார்ட் ஆச்சு. தனுஷ் முன்பே ஒரு படம் பண்ணியிருந்தார்.. முதன் முதலாக தனுஷை செட்டில் பார்த்துவிட்டு என் அம்மா கேட்டாங்க, இவர்தான் ஹீரோவா அப்படினு. அதன் பிறகு அம்மா என்னிடம் வந்து , நாம நல்ல முடிவுதான் எடுத்திருக்கோமா? இந்த படம் உன் அறிமுகப்படமாச்சே அப்படினு புலம்பினாங்க. அதன் பிறகு நான் அம்மாவை சமாதானப்படுத்தினேன். அம்மா சில ஸ்கிரிப்ட் அப்படியாகவும் , கதாபாத்திரங்கள் அப்படியாகவும் இருக்கும் அப்படினு சொன்னேன். செல்வ ராகவன் சார் சில நேரங்களில் அழுத்தம் காரணமாக என்னை சத்தம் போடுவார். அந்த சமயத்தில் தனுஷ்தான் எனக்கு ஆறுதலாக பேசி என்னை சமாதானம் செய்வார்.” என்றார் சோனியா அகர்வால்.