கோலிவுட்டில் பிரபல நடிகர் வைபவ் உடன் இணைந்து கப்பல், காட்டேரி படங்களில் நடித்தவர் நடிகை சோனம் பஜ்வா.
பஞ்சாபிய சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரபல நடிகையாக வலம் வரும் சோனம் பஜ்வாவுக்கு பஞ்சாபிய மொழி ரசிகர்கள் தாண்டியும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அவருக்கு பல மொழி சினிமா துறைகளிலும் ரசிகர்கள் உண்டு. இறுதியாக சென்ற ஆண்டு காட்டேரி படத்தில் வைபவ் உடன் சோனம் பஜ்வா இணைந்து நடித்திருந்தார்.
மேலும் சமூக வலைதளங்களிலும் சோனம் பஜ்வா பிரபல நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், மொழி தாண்டி பல்வேறு ரசிகர்களைக் கொண்டு விளங்கும் பஞ்சாபிய நடிகை சோனம் பஜ்வா தான் ஏன் பாலிவுட் சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ள சோனம் பஜ்வா, "பாலிவுட்டில் இரண்டு விஷயங்களுக்கு நான் நோ சொன்னேன், பஞ்சாபியர்களால் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. குடும்பங்களைப் பார்க்க வேண்டும் என்ற மனநிலை எங்களுக்கு உள்ளது.
அன்றைய காலக்கட்டத்தில் ஒரு படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என பயந்தேன். என்னை இன்றைக்கு இந்த நிலைக்கு ஆளாக்கிய ரசிகர்கள் எப்படி இதை எடுத்துக் கொள்வார்கள் என எனக்குத் தெரியவில்லை. இது ஒரு படத்துக்கானது என்பதை என் குடும்பத்தினர் புரிந்து கொள்வார்கள் என நான் எண்ணவில்லை.
பாலிவுட் வாய்ப்புகளை நிராகரிக்காமல் இன்னும் யோசித்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் இதைப் பற்றி என் அம்மா மற்றும் அப்பாவிடம் பேசினேன். அப்போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் இது ஒரு படத்துக்காக என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்கள். நான் கூச்சப்பட்டு அவர்களிடம் பேசாமல் இருந்துவிட்டேன்” எனப் பேசியுள்ளார்.
பாலிவுட்டில் பாலா, ஸ்ட்ரீட் டான்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சோனம் பஜ்வா, பல பெரிய நடிகர்களது படங்களின் வாய்ப்புகளை நிராகரித்துள்ளார். இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் கேரி ஆன் ஜட்டா 3 எனும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆமீர் கான் முன்னதாகக் கலந்துகொண்டு பாங்கரா நடனம் ஆடி வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Maamannan Poster: மழையும் குடையும்...! உதயநிதியுடன் ரொமான்ஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ்: மாமன்னன் லேட்டஸ்ட் போஸ்டர் வெளியீடு!