காலச்சக்கரம் சில நேரங்களில் ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வுகளை மீண்டும் நிகழ்த்தி காட்டி நம்மை அசத்தும். விளையாட்டுகளில் பல நேரங்களில் ஏற்கனவே நடந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழும் அதிசயங்களும் அரங்கேறும். அதுபோன்ற அதிசயம் மீண்டும் நிகழுமா? என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.


2011 -2023 ஒற்றுமை:


நடந்த முடிந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் முன்னாள் சாம்பியனான மும்பை அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்று குவாலிபயர் 2வரை முன்னேறி குஜராத் அணியுடன் தோற்று வெளியேறியது. இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன்பு இதேபோல 2011ம் ஆண்டு நடந்தது. அப்படி என்ன அந்தாண்டில் இருக்கிறது என்று எந்த கிரிக்கெட் ரசிகர்களும் நிச்சயம் கேட்க மாட்டார்கள். அதற்கு காரணம் இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத பொற்காலம் அந்தாண்டு.


28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக ஒருநாள் உலக கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி வென்று காட்டியது அந்தாண்டுதான். ஆண்டுதோறும் ஐ.பி.எல். நடத்தினாலும், டி20 உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று நடத்தினாலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விஷயமாக இருப்பது 50 ஓவர் உலக கோப்பையே ஆகும்.


சென்னை சாம்பியன்:


2011ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு இதேபோல நிலை ஏற்பட்ட பிறகு அந்த ஐ.பி.எல். தொடரை சென்னை அணி கைப்பற்றியது. அந்த ஆண்டில் இந்தியாவில்தான் உலககோப்பை நடத்தப்பட்டது. அந்த தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி மகுடம் சூடியது.


2023ம் ஆண்டிலும் அதாவது நடப்பாண்டிலும் மும்பை அணி ஐ.பி.எல். தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி குவாலிபயர் 2ம் ஆட்டத்தில் குஜராத் அணியிடம் தோற்றது. நடப்பு ஐ.பி.எல். தொடரையும் சென்னை அணியே கைப்பற்றியுள்ளது.


மீண்டும் திரும்புகிறதா?


இந்தாண்டும் இந்தியாவில்தான் 50 ஓவர்களுக்கான உலக கோப்பைத் தொடர் நடைபெற உள்ளது.  இதனால், 2011ம் ஆண்டில் நடந்ததுபோலவே அனைத்து நிகழ்வுகளும் அரங்கேறி வருவதால் 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய அணியே கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.


2011ம் ஆண்டு உலகக்கோப்பையை போலவே நடப்பு உலகக்கோப்பை தொடரில் வலுவான அணியாக களமிறங்கியதை போலவே நடப்பு தொடரிலும்  இந்திய அணி விராட்கோலி, ரோகித்சர்மா, சுப்மன்கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகியோருடன் வலுவான அணியாகவே களமிறங்குகிறது. இதனால், அன்று தோனி உலககோப்பையை வென்றது போல இந்தாண்டு ரோகித்சர்மா உலககோப்பையை கையி்ல ஏந்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.