கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றிருக்கும் மாமன்னன் படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.


தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.


ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் இப்படத்தில்  முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இந்நிலையில் மாமன்னன் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றிருக்கும் போஸ்டர் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் உடன் குடை பிடித்தவாறு கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றிருக்கும் இப்போஸ்டர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.





இதேபோல்  நேற்று மாமன்னன் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்புடன் ஃபஹத் ஃபாசில் இடம்பெற்றிருக்கும் போஸ்டர் வெளியானது.


மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஜூன்.01) கோலாகலமாக நடைபெற உள்ளது. மாமன்னன் திரைப்படம் தான் தன் இறுதிப்படம் என நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துவிட்ட நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செக்கன் லுக் போஸ்டர்கள், அப்டேட்கள் வெளியாகத் தொடங்கின. மேலும் நடிகர் வடிவேலுவின் குரலில் ராசாக்கண்ணு, ஏ.ஆர்.ரஹ்மானில்  குரலில் எல்லாம் மாறும் ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 


மார்ச் 2022ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில், சுமார் 110 நாள்களுக்குப் பிறகு கடந்த் செப்டெம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.


யுகபாரதி இப்படத்துக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தின் ஓடிடி உரிமையை முன்னதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.  வடிவேலு டைட்டில் கதாபாத்திரமான மாமன்னன் கதாபாத்திரத்திலும் உதயநிதி ஸ்டாலின் ராசாக்கண்ணு கதாபாத்திரத்திலும், கீர்த்தி சுரேஷ் சம்பா எனும் கதாபாத்திரத்திலும், ஃபஹத் ஃபாசில் பெருமாள் வைகுண்டம் எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.  


மேலும் படிக்க: AL PACINO: 29 வயது காதலி கர்ப்பம்.. 4வது குழந்தைக்கு அப்பாவாகும் 83 வயது ஹாலிவுட் நடிகர் - ரசிகர்கள் கடும் விமர்சனம்