தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தலைமையில் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடைபெற்றது.  தென் மண்டலத்தில் ரெளடிகள் மோதும் சில சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் ரெளடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உட்பட கடுமையான சட்டங்கள் மூலம் அவர்களை தண்டிக்கவும், ரெளடிகள் மீது உள்ள பழைய வழக்குகளை துரிதப்படுத்தி, அவர்களுக்கு அதிகபட்ச தண்டணை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து சிறையிலடைக்கவும் அறிவுரைகளை வழங்கினார்.

 



 

கட்டப்பஞ்சாயத்து. கந்துவட்டி, கஞ்சா கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை தரம்பிரித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியதோடு, குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பாக காவல் நிலையத்திற்கு வரும் புகார்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், ஆன்லைன் மூலமாக நிதி முறைகேடு மற்றும் பெண்களுக்கு எதிராக மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பதிவிடுபவர்களை கண்காணிக்கவும் அறிவுரை வழங்கினார். மேலும் காவலர்கள் மனநிலையை அமைதிப்படுத்தும் வகையில் யோகா உள்ளிட்ட  பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

 




 

காவல்நிலையத்தில் வரக்கூடிய பொதுமக்களிடையே அச்சத்தை போக்கும் வகையில் காவலர்கள் கண்ணியமாக நடந்துகொள்வதை உறுதிபடுத்த வேண்டும் எனவும், மகளிர் காவல்நிலையங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதில் மதுரை மாநகர காவல் ஆணையாளர், தென்மண்டல காவல் துறை தலைவர் மற்றும் காவல் ஆணையர், மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் மதுரை மாநகர காவல் துணை ஆணையர்களும் கலந்து கொண்டனர்.





 

முன்னதாக கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள தேனி மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜோதிராஜ் -ன் குடும்பத்திற்கு உதவி தொகையாக 50ஆயிரம் ரூபாயை அவரது மகளிடம் வழங்கியதை தொடர்ந்து பாதுகாப்பு பணியின் போது சிறப்பு பணியாற்றிய ஆயுதம் ஏந்திய இருச்சக்கர ரோந்து காவலர்கள் , ஆயுதப்படை மற்றும் முதுநிலை காவலர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுசான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மதுரை மாநகர காவல் துறை அலுவலகத்திற்கு வருகைதந்த  காவல்துறை இயக்குநருக்கு மாநகர காவல் துறை சார்பாக ஆயுதப்படை காவலர்களின் மரியாதை வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.