நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்தும், அவரின் குணங்கள் குறித்தும் பேராசிரியர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக்கியுள்ளது.


கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர்கள் ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக், ரகுவரன், சுமன், மணிவண்ணன், வடிவுக்கரசி, சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் “சிவாஜி”. ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஷங்கர் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக பாடல்கள், ரஜினியின் ஸ்டைல், ஸ்ரேயாவின் கவர்ச்சி என படம் முழுக்க ரசிகர்களை கவரும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தது. 






இந்த படத்தில் சாலமன் பாப்பையா ஸ்ரேயாவின் எதிர்வீட்டில் உள்ளவராக வருவார். ஸ்ரேயாவின் அப்பாவாக பட்டிமன்றம் ராஜா நடித்திருப்பார். ரஜினி குடும்பத்தை வீட்டை விட்டு துரத்துவார் ராஜா. உடனே சாலமன் பாப்பையா அங்கு வந்து எங்க வீட்டுக்கு வாங்க. என்கிட்ட 2 பொண்ணுங்க இருக்காங்க..அங்கவை..சங்கவை என இருவரை காட்டும் காட்சிகள் நன்கு பிரபலம். இன்றளவும் பேச்சு வழக்கில் இருக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று. 


ஏற்கனவே ஷங்கரின் பாய்ஸ் படத்தில் சாலமன் பாப்பையா நடித்திருந்தாலும், சிவாஜி அவருக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சாலமன் பாப்பையா ரஜினியுடன் நடித்தது குறித்தும், அவரின் குணங்கள் குறித்தும் பேசியுள்ளார். அந்த வீடியோவில் சிவாஜி படத்தில் ரஜினியுடன் தான் நடித்தது நல்ல அனுபவம் என்றும், அவர் ஒரு பெரிய மனுஷன் எனவும் தெரிவித்துள்ளார். 






மேலும் அவ்வளவு பெரிய பொருளும் புகழும் சம்பாதித்த பிறகு தான் ஒன்றும் இல்லை என நினைக்கும் மனிதர். அவரை பார்த்தவுடன் அவரிடம் இருந்து கத்துக்க வேண்டிய விஷயம் உள்ளது என புரிந்து கொண்டேன். ரஜினியுடன் இணைந்து நடித்தது உண்மையிலேயே மகிழ்ச்சி என சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.