பிரபல நடிகை பாவனா தனக்கு நேர்ந்த அநீதி பற்றியும், அதன் பிறகு தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் முதன் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பலவேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பாவனா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு படப்பிடிப்புக்கு சென்று வீடு திரும்பியபோது ஒரு கும்பல் இவரை கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பல்சர் சுனில் என்பவரை கைது செய்தனர்.
அவர் மலையாள நடிகர் திலீப் தான் தங்களை இப்படி செய்யச் சொன்னதாக வாக்குமூலம் அளிக்க, பின்னர் போலீசார் திலீப்பையும் கைது செய்து விசாரணை நடத்தினர். தற்போது திலீப் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு `வி த வுமன் ஆஃப் ஆசியா' கூட்டமைப்பு நடத்திய `குளோபல் டெளன்ஹால்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனா, தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் பர்கா தத் கேட்ட கேள்விகளுக்கு நடிகை பாவனா அளித்த பதில்கள், அவரது மன உறுதியையும், எதிர்த்து நின்று போராடும் குணத்தையும் காட்டுகின்றன.
அவர் பேசுகையில், "என் வாழ்வையே தலைகீழாக திருப்பிப்போடும் சம்பவங்கள் எனக்கு நடந்தன. நான் மிகவும் கடினமான பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். நான் பாதிக்கப்பட்டவள் அல்ல, வாழ்க்கையில் மீண்டு வந்தவள். இந்த அநீதிக்கு முடிவு கிடைக்கும்வரை நான் விடாமல் போராடுவேன். நீதிக்கான போராட்டம் அவ்வளவு எளிதானது அல்ல. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி விரிவாகக் கூற விரும்பவில்லை. நான் 15 முறை நீதிமன்ற விசாரணைக்காக சென்று வந்துள்ளேன். மீண்டும் மீண்டும் அவர்கள் கேட்ட கேள்விகளை நான் கடந்து வந்துகொண்டிருக்கிறேன்.
நான் நிரபராதி என தெளிவுபடுத்தும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டுள்ளேன். என் தந்தை இருந்திருந்தால் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் எதிர்கொள்ளவேண்டிய நிலையே எனக்கு ஏற்பட்டிருக்காது. ஐந்து ஆண்டுகளாக எனது இந்த கடினமான பயணத்தில் இருந்து வருகிறேன். இந்த பாதிப்பில் இருந்து வாழ்க்கையை நோக்கிய பயணமாக அது இருக்கிறது. சமூக வலைதளங்களில் எனக்கு எதிராகச் செய்யப்பட்ட பிரசாரங்கள் என்னை மிகவும் வேதனைப்படுத்தின. சிலர் காயப்படுத்தியதுடன், நடக்காத விஷயங்களை பரப்பினர். நான் கூறுவது பொய் என்றும், இது பொய் வழக்கு என்றும் சிலர் சொன்னார்கள்.
சிலர் என்மீது குற்றம் சாட்டினார்கள். என்னை என் மனநிலையை, எனது தனிப்பட்ட குணநலனை தகர்க்கும் விதமான சூழ்நிலையும் பல ஏற்பட்டது. பெற்றோர்களால் மோசமாக வளர்க்கப்பட்டவள் என்று பலரும் கூறினார்கள். ஒருகட்டத்தில், `எனக்கு இதெல்லாம் போதும்' என எனக்கு நெருக்கமான நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டேன். ஒரு சிலர் எனக்கு அந்த சமயங்களில் ஆதரவாக இருந்தனர். நடிகைகள் சங்கம் (WCC) எனக்கு ஆதரவாக செயல்பட்டது. என்னுடன் பக்கபலமாக நின்றவர்களுக்கு மிக்க நன்றி. நான் தொடர்ந்து போராடுவேன்.
நான் செய்தது சரி என்பதை ஒருநாள் தெளிவுபடுத்துவேன். எனது மரியாதை எனக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதே எனது வெற்றி. தனிப்பட்ட முறையில் இன்னும் என் பயம் என்னைவிட்டு போகவில்லை. அது எதற்காக என்பதற்கு என்னிடம் விடை ஏதும் இல்லை. சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது, ஒரு சிலர் எனக்கு வாய்ப்பு வழங்கினார்கள். அதையும் நான் வேண்டாம் என மறுத்தேன். இந்த சமூகம் பெண்களை மட்டும் வேறுகோணத்தில் பார்க்கிறது. அது கண்டிப்பாக மாற வேண்டும். மீண்டு வருபவர்களை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதுவே ஆரோக்கியமான சமூகம்" என்று பேசினார்.