புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு தேர்தலின் போதும் சிறுபான்மையின மக்களுக்கு அரணாக திமுக இருக்கும் என கூறி அம்மக்களின் வாக்குகளை பெற்று அதிகாரத்தில் அமரும் போது, பல்வேறு காலக்கட்டங்களில் சிறுபான்மையின மக்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்காமல் திமுக ஏமாற்றி வருகிறது. சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலன் பாதுகாப்பு என கூறிக்கொள்ளும் திமுக நடைபெற்ற மாநகராட்சி மேயர், மற்றும் துணை மேயர் தேர்தலில் சிறு பான்மையின முஸ்லீம், கிருத்துவ மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல், அவர்களுக்கு வழக்கம் போல் துரோகத்தை இழைத்துள்ளது.


21 மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்களில் ஒருவர் கூட சிறு பான்மையினர் இல்லை, 21 மாநகராட்சியில் துணை மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களில் ஒருவர் கூட முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. இரண்டே இரண்டு துணை மேயர் பதவிகள் கிருத்துவ சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் சிறுபான்மையினரை மேயராக திமுக ஆக்கியிருக்க முடியும். ஆனால், அதை செய்யாமல் போலி மத சார்பின்மையயை திமுக பேசி வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்த டாக்டர் அப்துல்கலாம் அவர்களை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க மத்தியில் பிஜேபி ஆட்சியில் அமர வைத்தவர் எங்களது புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.



ஆனால், முஸ்லீம் சமுதாய ஜனாதிபதி வேட்பாளரை எதிர்த்தவர்கள் காங்கிரஸ், மற்றும் திமுக என்பதை முஸ்லீம் சமுதாய மக்கள் மறந்து விடக் கூடாது. போலி சமூக நீதி, போலி சிறுபான்மையின பாதுகாப்பு பற்றி பேசும் திமுகவின் சுயரூபத்தை முஸ்லீம், மற்றும் கிருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உணரவேண்டும். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 300 நாள் சாதனையை அவரது அரசின் சாதனையாக பேசுவது நகைப்பாக உள்ளது. ஐந்தாண்டு காலம் வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகளை எங்கள் ஆட்சியின் போது நாங்கள் கொண்டுவந்தோம் அது இப்பொழுது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.




தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வெளிப்படையான, நேர்மையான, நியாயமான, ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது. இதிலும், முன்னாள் முதலமைச்சர்  நாராயணசாமி அவர்கள் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். முதலமைச்சர், மற்றும் மாண்புமிகு அமைச்சர்களின் ஊழல்களை ஆதாரத்துடன வெளிப்படுத்துவேன் என பொத்தாம் பொதுவாக பேசுகிறார். ஆதாரத்துடன் அமைச்சர்களின் ஊழல்களையும், முறைகேட்டையும் அவர் தெரிவித்தால் அதன் மீது அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தும். வழக்கம் போல பொய்யான தகவலை மலிவு விளம்பரத்திற்காக பேசுவதை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என  அவர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண