சேமிப்பு.. எப்போதும் ஒரு வீட்டில் பெண் தான் சேமிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். அதனாலேயே பெண்களை சுற்றி நிறைய சேமிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. போஸ்ட் ஆஃபீஸ் தொடங்கி, வங்கிகள் வரை பல்வேறு திட்டங்களையும் வைத்துள்ளன.


அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சேமிப்புத் திட்டங்கள் பற்றி அறிவோம்.
பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடையவே,  பவர் சேமிப்பு கணக்கு திட்டத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை ஒரு பெண் பயன்படுத்த வேண்டுமெனில் அவர் இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பெண்கள் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். கூட்டு சேமிப்பு கணக்கும் (Joint account) தொடங்கலாம். ஆனால், இதில் ஒரே ஒரு நிபந்தனை உள்ளது. கூட்டுக் கணக்கில் முதல் பெயர் ஒரு பெண்ணுடையதாகவே இருக்க வேண்டும். கிராமப்புறம், நகர்ப்புறம் என அனைத்து பகுதிகளை சேர்ந்த பெண்களும் இந்தக் கணக்கை தொடங்கலாம்.
இதற்கு அதிகமான தொகையைத் தான் செலுத்த வேண்டுமென்று இல்லை. தொடக்கத்தில் வெறும் 500 ரூபாய் வைத்து கணக்கு திறக்கலாம். இது கிராமப்புற மகளிருக்கு மட்டுமே. நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் 2000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். சிறு நகரங்களில் 1000 ரூபாய் டெபாசிட் செய்யலாம். 


என்னென்ன சலுகைகள்?
இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குபவர்களுக்கு டெபிட் கார்டு, 50 ஆண்டுக்கான செக் புக், இலவச நெஃப்ட், இலவச SMS சேவை, 5 லட்சம் ரூபாய் வரை இலவச விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கிடைக்கும். ஒரு நாளுக்கு 50000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம்.


மகிளா உதயம் நிதி திட்டம்;
அடிப்படை சேமிப்புக் கணக்கு தாண்டி, இதேபோல பெண்கள் சுய தொழில் செய்வதற்காக மகிளா உதயம் நிதி திட்டத்தையும் பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்கீழ், தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு கடன் உதவி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் உள்கட்டமைப்பு, ஆலை அமைப்பு போன்ற தொழில் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வழங்கப்படுகிறது.


சிறு துளி பெரு வெள்ளம். பெண்கள் பொருளாதார தன்னிறைவைப் பெற இத்திட்டம் மிகவும் உபயோகரமானதாக இருக்கும். ஒரு பெண்ணின் சேமிப்புப் பணம் என்பது ஒரு குடும்பத்திற்கு பல நேரங்களில் சிறந்த துணையாக இருப்பதை நாம் நம் வீட்டிலிருந்தே பார்த்திருப்போம். இந்தியாவில் இது ஊறிப்போன விஷயம். வீட்டிலேயே பணத்தை அங்குமிங்குமாக வைப்பதைவிட இப்படி வங்கிகளில் சேமித்து வைத்தால் பணத்திற்கு பாதுகாப்பு இருக்கும் எனக் கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.