தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகராக அறியப்படுபவர் நடிகர் சோபன் பாபு. சோபன் பாபு என்றதுமே நமது நினைவுக்கு வருவது ஜெயலலிதாதான். சரி ! இவர்கள் உறவு குறித்து பார்ப்பதற்கு முன்னால் , சோபன் பாபுவின் சினிமா பயணத்தை சற்று ரீக்கேப் செய்து விடுவோம்.
கடந்த 1937 ஆம் ஆண்டும் ஜனவரி மாதம் உப்பு ஷோபனா சலபதிராவாக பிறந்தவர். இவரது தந்தையின் பெயர் உப்பு சூர்யநாராயண ராவ். ஒரு எளிய விவசாய குடும்பம்தான். சோபன் பாபுவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சின்ன நந்திகம என்னும் கிராமம். மயிலாவரம் மேல்நிலைப் பள்ளியில் தனது ஆரம்ப கல்வியை பயின்ற சோபன் பாபு , விஜய்வாடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் தனது பட்டப்படிப்பை பயின்றார். பள்ளி பருவத்திலேயே மேடை நாடகங்களில் அசத்தி வந்த சோபன் பாபுவிற்கு சிறுவயதிலேயே சினிமா என்றால் அவ்வளவு பிடிக்குமாம். கீழக்கூர்ரம் என்னும் திரைப்படம்தான் சோபன் பாபு பார்த்த திரைப்படமாம். பாதாள பைரவி, மல்லீஸ்வரி, தேவதாசு ஆகிய தெலுங்கு படங்கள் இன்றளவு மனதை விட்டு அகலாத படங்கள் என்றும் அட்ர்ஹில் மல்லீஸ்வரி திரைப்படத்தை 22 முறை திரையரங்கிற்கு சென்று பார்த்ததாகவும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
பட்டப்படிப்பு முடித்த சோபன் பாபு மேற்கொண்டு சட்டம் பயில சென்னைக்கு வந்திருக்கிறார். என்னதான் சட்டப்படிப்பின் மீதான ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா மீதான மோகம் விடவில்லை. காலை கல்லூரிக்கு செல்வது , மாலையில் சினிமா ஸ்டூடியோக்களில் வாய்ப்பிற்காக ஏறி இறங்குவதுமாக இருந்திருக்கிறார் சோபன் பாபு. 1959 ஆம் ஆண்டு முதன் முதலில் என்.டி.ராமாரவ் உடன் நடித்த சோபன் பாபு அடுத்தடுத்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.தன்னை நம்பி மனைவி , குழந்தை இருப்பதால் அவர்களின் தேவைக்காகவே சோபன் பாபு தொடர்ந்து நடிக்க தொடங்கினார். ஆம், கடந்த மே 15, 1958 இல் காந்த குமாரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகுதான் தனது திரையுல பயணத்தை சோபன் பாபு தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிறைய படங்களில் நடித்த சோபன் பாபுவிற்கு நர்த்தனசாலாவில் அபிமன்யுவாகவும், பீஷ்மரில் அர்ஜுனனாகவும், சீதாராமகல்யாணத்தில் லட்சுமணனாகவும், புத்திமந்துடுவில் கிருஷ்ணனாகவும் நடித்த கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. நந்தமுரி தாரகா ராமராவ் மற்றும் அக்கினேனி நாகேஸ்வர ராவ் என அந்த காலக்கட்டத்தில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த நடிகர்கள் சோபன் பாபுவை ஆதரித்தாகவும் , அவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்றுத்தந்ததாகவும் பின்நாட்களில் சோபன் பாபுவே தெரிவித்துள்ளார்.
1965 ஆம் ஆண்டு வெளியான வீர அபிமன்யு திரைப்படத்திற்கு பிறகு சோபன் பாபு ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார் . அதன் பிறகு நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த சோபன் பாபு , தெலுங்கு சினிமாவின் அசைக்க முடியாத நட்சத்திரமாக உருவெடுத்தார். காதல் காட்சிகளை இளசுகளை கொள்ளைக்கொண்ட சோபன் பாபு , குடும்ப படங்களில் நடித்து அக்காலத்து பெண்களின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். சோபன் பாபுவின் அதிரடி சண்டைக்காட்சிகளை காண வேண்டும் என்பதற்காகவே திரையரங்குகிற்கு விரைந்தவர்களும் உண்டு . ஆனாலும் ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் சோபன் பாபுவிற்கு அதிகமாம். இவருடன் பல முன்னணி நடிகைகள் ஜோடியாக நடித்து வந்த நிலையில் , கோலிவுட்டில் டாப் நடிகையாக இருந்த ஜெயலலிதாவும் அவ்வப்போது சோபன் பாபுவுடன் நடித்து வந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தார் ஜெயலலிதா. அந்த காலக்கட்டத்தில்தான் சோபன் பாபு, ஜெயலலிதா நட்பு குறித்து பரவலாக பேசப்பட்டது. 1975 ஆம் காலக்கட்டத்தின் சினிமாவில் இருந்து விலக போவதாக அறிவித்தார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதா சோபன் பாபுவை திருமணம் செய்துவிட்டதாக பத்திரிக்கைகள் எழுத தொடங்கின. சோபன் பாபுவுக்கு திருமணமாகி ஏற்கனவே இரண்டு மகன்களும் , மகள்களும் உள்ள நிலையில் , இதனை சோபன் பாபு எப்படி கையாளுவதென்றே தெரியாமல் திகைத்தார். ஆனால் ஜெயலலிதா துணிவாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் சோபன் பாபுவுக்கு எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது உண்மைதான். இதற்கு நாங்கள் இருவருமே பொறுப்பேற்க முடியாது. அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்துக்கொள்ள சிலர் அறிவுரை கூறுகிறார்கள் , ஆனால் ஒன்றுமே அறியாத அவர் மனைவியை விட்டுவிட்டு என்னை திருமணம் செய்துக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை” என பகிரங்கமாக பேசியிருந்தார்.
இதனால் சோபன் பாபு மற்றும் ஜெயலலிதா உறவில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. என்னதான் ஜெயலலிதா சோபன் பாபு குறித்து இப்படியாக பேசியிருந்தாலும் , எம்.ஜி.ஆரை சீண்டுவதற்காகத்தான் ஜெயலலிதா , சோபன் பாபுவுடன் நெருங்கி பழகியதாகவும் , கணவன் - மனைவி போல் வாழ்கிறார்கள் என உலகம் அறியட்டும் என சொந்த புகைப்படக்காரரை வைத்து புகைப்படம் எடுத்தாகவும் கூறப்படுகிறது. அது எப்படியோ அதன் பிறகு சோபன் பாபு தனது கடைசி சினிமா பயணம் வரையில் ஹீரோவாகவே நடித்து வந்தார். அதன் பிறகு கௌரவ தோற்றம், குணச்சித்திர நடிகர் என எந்த படத்திலும் சோபன் பாபு தோன்றவில்லை. பிரபல நடிகராக இருந்தாலும் அவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் காணக்கிடைப்பதில்லை. 1996ல் வெளிவந்த ஹலோ படத்திற்குப் பிறகு, குரு படத்தின் மூலம் தனது 30 ஆண்டுகால நடிப்பை முடித்துக் கொண்டு சென்னையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்தார். கடந்த மார்ச் 20, 2008 அன்று காலை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோபன் பாபு , சிகிச்சை பலனின்றி 10:50 மணிக்கு உயிரிழந்தார்.
சோபன் பாபு தன் வாழ்நாளில் பல விருதுகளை வாங்கி குவித்தார். அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக நான்கு பிலிம்பேர் விருதுகள், சிறந்த நடிகருக்கான ஐந்து நந்தி விருதுகள் , எட்டு சினிகோயர்ஸ் விருதுகள் , மூன்று வம்சி பெர்க்லி விருதுகள் மத்திய அரசின் சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவர் ஆந்திரா என்றாலும், தமிழக அரசியல் என வரும் போது, சோபன் பாபு பெயர் வராமல் கடக்காது. இன்று அவரது பிறந்தநாள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்