வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் தான் தனக்கு ரசிகர்களிடமிருந்து அன்பும், ஆதரவும் கிடைத்தது என்று நடிகை தேவயானி கூறியுள்ளார்.
90களில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் தேவயானி மிகவும் முக்கியமானவர். தற்போது தமிழ்சினிமாவின் டாப் ஹீரோக்களாக இருக்கும் அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் முதல் ரிட்டயர்ட் ஆகிவிட்ட நடிகர்கள் வரை, ரஜினி தவிர கிட்டத்தட்ட அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தவர் தேவயானி. கிளாமர் இல்லாத, எதார்த்தமான நடிப்பு போன்ற காரணங்களால் நகரம் முதல் கிராமம் வரை அத்தனை தரப்பினரிடமும் சென்று சேர்ந்தவர் தேவயானி. அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், தன் வாழ்வின் சில முக்கியமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வெள்ளித்திரையில் டாப் ஹீரோயின்:
வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்த தேவயானி காலப்போக்கில் சின்னத்திரையில் தடம்பதித்து அதிலும் தற்போது முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்த மாற்றம் குறித்து தேவயானியிடம் கேட்டபோது, வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தது மிகவும் எளிதாக இருந்தது. கிளாமர் இல்லாமல் குடும்பப் பெண் கதாப்பாத்திரங்களில் நடித்தது பெண்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைக் கொடுத்திருந்தது. அதனால், சின்னத்திரைக்கு வந்ததும் பெண்கள் என்னை எளிதாக ஏற்றுக்கொண்டார்கள். எனக்கு அன்பும் ஆதரவும் அதிகம் கிடைத்தது வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் தான் என்று கூறினார்.
குடும்ப பயணம் குறித்த நினைவுகள்:
அவரது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் குறித்து கேட்டபோது, மும்பை பயணத்திற்காக ஃப்ளைட்டில் அம்மா, அப்பா, நகுல் அவரது மனைவி எல்லோரும் ப்ளைட்டில் சென்றபோது விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம் அது. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் மும்பை தான். இங்கு வந்துவிட்ட பிறகு முதல் முறையாக மும்பை சென்றோம். அம்மா, அப்பாவுடன் சென்ற கடைசி பயணமாக அது இருந்தது. இந்த பயணத்திற்குப் பிறகு இருவரும் இறந்துவிட்டனர் என்று தேவயாணி கூறினார்.
அந்த பேட்டியில், காதல் கோட்டை திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படப்பிடிப்பு பற்றி பகிர்ந்து கொண்ட தேவயானி அந்த காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்றும், அந்த காட்சி சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் எடுத்தது என்றும் கூறினார்.
கமல் பற்றி தேவயானி:
பஞ்சதந்திரத்தில் கமல்ஹாசனுடனான காட்சி குறித்து பகிர்ந்து கொண்ட தேவயானி, அந்த காட்சி சிறிது தான் என்றாலும் தன்னால் மறக்க முடியாத காட்சியாக இருந்தது. அந்த காட்சிக்கு டப்பிங் நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியதாக அவர் கூறினார். மேலும், கமல்ஹாசனின் தீவிர ரசிகை நான் என்று கூறிய தேவயானி கமல்ஹாசன் நீண்ட நாள்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம் பற்றி கூறுகையில், “ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம். படத்தைப் போலவே ஷூட்டிங் ஸ்பாட்டிலும் வடிவேலுவால் ஒரே சிரிப்பலையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
ரஜினியுடன் ஏன் நடிக்கவில்லை:
முன்னதாக, 27 வருடங்களாக ரஜினிகாந்த் திரைப்படங்களில் ஏன் நடிக்க வில்லை என்பதை பற்றி பேசியிருந்த தேவயானி, ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் தகுந்த கதாபாத்திரத்திம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவரின் திரைப்படத்திற்கு நான் தேவை இல்லை போல என்றும் வருத்தமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.