புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவியை எரித்து கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


புதுச்சேரி உழவர்கரை கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் (வயது 53). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி மரிய லூர்தியா (வயது 52). இவர்களது மகன் பிரான்கோ (28), மகள் லூர்துமேரி (16). இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.


கடந்த 7-ந் தேதி வீட்டில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மரியலூர்தியா, லூர்துமேரி ஆகியோர் உடலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் உடல் கருகிய லூர்துமேரி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மரியலூர்தியா புதுவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியநாதனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், பெட்ரோல் தெளித்து தீயிட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆரோக்கியநாதனை போலீசார் கைது செய்தனர்.




காவல் நிலையத்தில் ஆரோக்கியநாதன் அளித்த வாக்குமூலம் :- எனது மனைவி மரிய லூர்தியா மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களில் ரூ.4 லட்சம் கடன் பெற்றேன். அந்த கடனை திரும்பி கொடுக்க முடியவில்லை. எனக்கும், வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனை எனது மனைவி கண்டித்தார். எனவே அவரை கொலை செய்ய முடிவு செய்து சம்பவத்தன்று அதிகாலை 3.30 மணி அளவில், ஏற்கனவே வீட்டில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை மரியலூர்தியா மீது தெளித்து தீ வைத்து கொளுத்தினேன். பெட்ரோலை மரியலூர்தியா மீது தெளிக்கும் போது அருகே தூங்கிக் கொண்டிருந்த மகள் லூர்துமேரி மீதும் விழுந்தது.




எனவே அவர் மீதும் தீ பரவியது. பின்னர் தீயில் கருகிய 2 பேரையும் மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்த கொலையை மறைப்பதற்காக வீட்டில் கொசுவர்த்தியால் தீப்பிடித்தாக நாடகமாடினேன். ஆனால் போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டேன் என அவர் கூறியுள்ளார். இதையடுத்து ஆரோக்கியநாதனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண