வதந்தி இணையத் தொடர் செய்தியாளர் சந்திப்பின் போது மீண்டும் அஜித், விஜய் படங்களை இயக்குவேன் என்று பேட்டி கொடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா!
அஜித் நடித்த வாலி படத்தை 1999 ஆம் ஆண்டு இயக்கி, தமிழ் சினி உலகில் டைரக்டராக கால் தடம் பதித்தார். அதற்கு பின்பு விஜய் நடிப்பில் குஷி படம் வெளியாகி செம ஹிட்டானது. பிறகு நியூ, அன்பே ஆருயிரே, கல்வனின் காதலி, வியாபாரி ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். சினி உலகில் பல ஆண்டுகளாக, ஹீரோவாக வலம் வந்த இவர், ஸ்பைடர், மெர்சல் மற்றும் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.
தற்போது, ட்ரெண்டிங்கில் இருக்கும் ஓடிடி தளங்களில் கவனம் செலுத்திய எஸ்.ஜே.சூர்யா, “வதந்தி” என்ற க்ரைம் வெப் தொடரில் நடித்துள்ளார். இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ‘சுழல்’ வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பை தொடர்ந்து இவர்களது தயாரிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் வெப் சீரிஸ் ‘ வதந்தி’. எஸ்.ஜே.சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த வெப் சீரிஸை முன்னதாக லீலை தொடரை இயக்கி இருந்த ஆன்ட்ரியூ லூயிஸ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த வெப் சீரிஸில் லைலா, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடந்தது.
இது தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “கில்லர் என்ற படத்தை இயக்கவுள்ளேன் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறிய எஸ்.ஜே சூர்யா, கடவுள் அருள் இருந்தால் மீண்டும் அஜித் மற்றும் விஜய் படங்களை இயக்குவேன்” என்று சொன்னார்.
மேலும் பேசிய அவர், “ வதந்தி வெப் தொடர் சர்வதேச அளவில் வெளியாகிறது. இன்று ட்ரெய்லர் வெளியாகிவுள்ளது, அமேசான் ப்ரைமில் இந்த சீரிஸ் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கில்லர் படத்தை இயக்குவதற்காக, அந்த கார் ஒன்றை வாங்கியுள்ளேன்.
அடுத்தடுத்து நிறைய படங்கள் ரிலீஸாகவுள்ளது. 12 ஆம் தேதி அன்று முக்கியமான அறிவிப்பு ஒன்று உள்ளது. இன்னொரு விஷயமும் உள்ளது. பிப்ரவரி மாதத்தில் “பொம்மை” படம் வெளிவரும். இதற்கிடையில் மார்க் ஆண்டனி வரும். பிறகு கில்லர் படத்தின் ஷூட்டிங்கை துவங்கி விடுவேன்.
வதந்தி, ஓடிடியில் வெளியாகிறது. நமது படம் அனைவரிடமும் சேர்கிறது என்பது மகிழ்ச்சியாக உள்ளது. தியேட்டர் ஒரு கண் என்றால், ஓடிடி மற்றொரு கண்.” என்று கூறினார்.