கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியான தனுஷின் ’கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தின் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.


பொங்கல் ரேஸ்!


இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி வெளியாகியிருக்கும் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ ஆகிய இரு படங்கள் வெளியாகியிருக்கின்றன. இரண்டு படங்களும் நல்ல விமர்சனங்களைப் பெற்று திரையரங்கங்களுக்கு மக்களை ஈர்த்துள்ளன. இவ்விரு படங்களின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.


அயலான்


இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் அயலான் படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கே.ஜே. ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஏலியன் ஃபேண்டஸி படமான அயலான் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறது குழந்தைகள் அதிகம் விரும்பிப் பார்க்கும் படமாக அமைந்துள்ளது. 






அயலான் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் உலகளவில் ரூ 50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. அதே நேரம் இந்தியளவில் அயலான் திரைப்படம் 27. 39 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுக்களை வெளியிடும் Sacnilk தளம் தெரிவித்துள்ளது.


 கேப்டன் மில்லர்


தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், ஷிவ ராஜ்குமார், ஜெயபிரகாஷ், சந்தீப் கிஷன் , அதிதி பாலன் , நிவேதா தாமஸ், ஜான் கொக்கென் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்துள்ளது. மேலும் சித்தார்த்தா நூனியின் ஒளிப்பதிவு, ஜி.வி பிரகாஷ் குமாரின் இசை அதிகம் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.


கேப்டன் மில்லர் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், பாக்ஸ் ஆஃபிஸ்  தரவுகளை வெளியிட்டு வரும் சாக்னிக் தளத்தின்படி கேப்டன் மில்லர் படம் உலகளவில் ரூ.48. 5 கோடிகளையும், இந்திய அளவில் ரூ.35.2 கோடிகளையும் வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.


 






பொங்கல் ரேஸில் யாருக்கு வெற்றி


'கேப்டன் மில்லர்' மற்றும் 'அயலான்' ஆகிய இரு படங்களுக்கு இடையிலும் வெளியாவதற்கு முன்பிருந்தே பெரும் எதிர்பார்ப்பும் போட்டியும் இருந்து வருகிறது. இரண்டு படங்களும் வசூல் ரீதியாக மிக நெருக்கத்தில் இருக்கின்றன. இந்த பொங்கல் ரேஸில் நீயா நானா என்று ஓடிக் கொண்டிருக்கும் இரு படங்களில் யார் ஃபினிஷ் லைனை முதலில் தொடப்போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!