வரும் 22 ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி 21 ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ராமர் கோயில் திறப்பு:


உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.


கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


ஸ்ரீரங்கம் வருகை:


ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படும் நிலையில், 21 ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்னதாக 108 வைணவத் தளங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்காநாதரை  தரிசித்து விட்டு அயோத்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடியின் வருகை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள், விமான நிலையத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழிதடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு படையினரும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு இன்றே ஸ்ரீரங்கத்தில் உள்ள வீடுகள், கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ராமர் கோயில் விழா அட்டவணை:


ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.



  • ஜனவரி 16ஆம் தேதி முதல் வழிபாடு தொடங்கும்.

  • ஜனவரி 17 ஆம் தேதி ஸ்ரீவிக்ரஹத்தின் வளாகத்தைப் பார்வையிடவும், கருவறையை சுத்தப்படுத்தவும் பூஜைகள் நடைபெறும்

  • ஜனவரி 18 ஆம் தேதி வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெறும்.

  • ஜனவரி 19 அன்று காலையில் பழம் மற்றும் தானியங்கள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 

  • ஜனவரி 20-ம் தேதி காலையில் மலர்கள் மற்றும் ரத்தினங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், மாலையில் கிரித் ஆதிவாசமும் நடைபெறும்.

  • ஜனவரி 21ஆம் தேதி காலை சர்க்கரை, இனிப்பு, தேன், மருந்து கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

  • ஜனவரி 22 அன்று, நடுப்பகல் வேளையில், ராமர் சிலயின் கண்களில் கட்டப்பட்டிருக்கும் துணி அகற்றப்பட்டு, கண்ணாடி முன் வைத்து காட்டப்படும். இது முக்கியமான நிகழ்ச்சியாகும்.