Ayalaan: சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தின் டைட்டில் கார்டில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு படக்குழு மரியாதை செலுத்தியது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

 

ரவிக்குமார் இயகக்த்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் பொங்கல் ரிலீசாக இன்று திரைக்கு வந்துள்ளது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் பிரமாண்ட கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் வெளிவந்துள்ள அயலான் படம், குழந்தைகள் கொண்டாடும் படமாக வரவேற்பை பெற்றுள்ளது. 

 

இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியானது. அதில், மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக “என்றென்றும் நினைவில்” என விஜயகாந்தின் மறைவுக்கு டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. 

 

ரஜினி, கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் சென்று விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலி நிகழ்வில் நேரில் வர முடியாத சூர்யா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று தங்களின் மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்தினர். 

 

இதில், விஜயகாந்தின் மறைவுக்கு சென்னையில் இருந்து கொண்டே நடிகர் சிவகார்த்திகேயன் செல்லவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. எனினும், கடந்த 6ம் தேதி விஜயகாந்தின் இல்லத்திற்கு தனது மனைவியுடன் சென்ற சிவகார்த்திகேயன் தனது ஆறுதலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்தார். அதை தொடர்ந்து தற்போது வெளி வந்துள்ள அயலான் படத்திலும் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக டைட்டில் கார்டும் போடப்பட்டுள்ளது. அதில், “ என்றென்றும் நினைவில் கே.கே.ஆர் & பேமிலி, சிவகார்த்திகேயன் & பேமிலி, அயலான் டீம்” என குறிப்பிடப்பட்டதுடன், விஜயகாந்த் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சின்னத்திரையில் மிமிக்ரி செய்து வந்த சிவகார்த்திகேயன் விஜயகாந்த் குரலில் பேசி கவனத்தை ஈர்த்தார். 

 

இன்று நேற்று நாளை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சைன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏலியன் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் ஏலியனுக்கு டப்பிங் பேசி இருப்பது கூடுதல் சிறப்பு.

 

இதேபோல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் மறைந்த விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.