மாநாடு படம் ஒரு வழியாக ரிலீஸாகிவிட்டது... சிம்பு நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் மாநாடு. என்னதான் சிம்பு ஈஸ்வரன் படத்தில் உடல் எடை குறைத்து ரீ- எண்ட்ரீ கொடுத்திருந்தாலும், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபுடன் சிம்பு கூட்டணி அமைக்குறார் என்றதுமே , சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்புகள் எகிற தொடங்கியது. படம் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் என்றார்கள் , பிறகு தீபாவளி ரிலீஸ் என்றார்கள் , பிறகு தீபாவளி ரேஸ் எங்களுக்கு வேண்டாம் , நாங்கள் சோலோவாக வருகிறோம் என நவம்பர் 25 (இன்று) ஆம் தேதியை ஃபிக்ஸ் செய்தனர். ஆனால் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் திட்டமிட்டப்படி ரிலீஸ் ஆகது என ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அதன் பிறகு தீவிர பேச்சுவார்த்தையில் இறங்கியது சம்பந்தப்பட்ட தயாரிப்பு தரப்பு , சிம்பு மற்றும் மாநாடு படக்குழுவினர் . திக் திக் நிமிடங்களாக அமைந்தது நேற்றிரவு. மாநாடு ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளானது.
ஒருவழியாக பேச்சுவார்த்தையில் சுமூகமான நிலை எட்டப்பட்டு, மாநாடு திட்டமிட்டப்படி இன்று ரிலீஸாகும் என அறிவித்தனர். படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.முன்னதாக படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவக்கார்த்திகேயன் ட்வீட் செய்திருந்தார். அதில் வாழ்த்துக்கள் சிலம்பரசன் , எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் வெங்கட் பிரபு, கல்யாணி பிரியதர்ஷன் ,யுவன் சங்கர் ராஜா, சுரேஷ் காமாட்சி மற்றும் மாநாடு குழுவினர். படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.எனக்கு நிச்சயமாக தெரியும் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் படம் சிறப்பானதாக அமையும்.” என குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு கீழே கமெண்ட் செய்த நடிகர் பிரேம்ஜி “சார் நான்” என தன்னை டேக் செய்யாததை குறித்து ஏக்கமாக பதிவிட்டிருந்தார். அதற்கு சிவகார்த்திகேயன் பதில் எதுவும் கொடுக்கவில்லை. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பிரேம்ஜி கமெண்டிற்கு பதிலளித்த சிவகார்த்தியேன் ரசிகர்கள் மாநாடு டீம் என்றால் நீங்களும்தானே பிரேம்ஜி அண்ணா என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இன்னும் சிலரோ ஒரு வேளை சிவகார்த்திகேயனுக்கு பிரேம்ஜியை பிடிக்காது போலும் என கிசுகிசுக்க தொடங்கியுள்ளனர். வெங்கட் பிரபுவின் உடன் பிறந்த சகோதரன்தான் பிரேம்ஜி. வெங்கட் பிரபு தான் இயக்கும் அத்தனை படங்களிலும் காமெடியனாக பிரேம்ஜியைத்தான் களமிறக்குவார். சிம்புவின் தீவிர ரசிகரான பிரேம்ஜி அவரை போலவே சில காட்சிகளில் நடிப்பார். மாநாடு படத்தில் சிம்பு மற்றும் பிரேம்ஜி காம்போ ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.