ஸ்டாண்டப் காமெடியனாக களமிறங்கி தனது அதீத முயற்சியாலும் , கடின உழைப்பாலும் அடுத்தடுத்த வெற்றிப்படிகளை கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் தோற்றம்தான் சிவாவின் பிளஸ். அதனால்தான் ரசிகர்கள் அவரை தங்கள் வீட்டு பிள்ளை போல கணெக்ட் செய்துக்கொள்கிறார்கள். பல இன்னல்களை தாண்டி வந்த சிவகார்த்திகேயன் தயாரிப்பில் , நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் டாக்டர். அந்த படம் நடத்திய வசூல் வேட்டையை முன்னதாக வெளியான பல செய்தித்தொகுப்பில் பார்த்தோம் . அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு படு பிஸியாக நடிக்க தொடங்கிவிட்டார் சிவா. அடுத்த ஆண்டு சிவாவின் நடிப்பில்  ஐந்து  திரைப்படங்கள் தற்போது உறுதியாகியுள்ளன.






டான் :


சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டான்’. இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 2022 ம் ஆண்டு , காதலர் தினமான பிப்ரவரி 14 அல்லது சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.


அயலான் :


சயின்ஸ் ஃபிக்ஸன் காமெடி கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். படத்தை ரவிக்குமார் இயக்க , ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சில கடன் பிரச்சனைகள் காரணமாக தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் படத்திற்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பிரச்சனைகள் முடிக்கப்பட்டு படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






சிங்கப்பாதை :


அட்லியின் உதவி இயக்குநர் அசோக் இயக்கத்தில். அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். படத்திற்கு இமான் இசையமைக்கிறார். கேஜேஆர் ஸ்டூடியோஸ் படத்தை தயாரிக்கிறது. தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இந்த திரைப்படமும் 2022 வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.



கமலுடன் கைக்கோர்க்கும் சிவா:


ரங்கூன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குநர்களுள் ஒருவராக இருக்கிறார். இவர் சமீபத்தில் கமலிடன் கதை சொல்லியதாகவும் அதனை தயாரிக்க கமல் பச்சைக்கொடி அசைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். இதன் மூலம் கமலுடன் முதன் முறையாக சிவா இணைய உள்ளார்.



பை - லிங்குவலில் சிவா :



தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பைலிங்குவல் படம் ஒன்றில் நடிக்க போகிறாராம். இந்த படத்தின் ஷுட்டிங் ஜனவரி மாதம் துவங்கப்பட உள்ளதாம். படத்தின் பெயர் மற்றும் அடுத்தடுத்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்