சிவகார்த்திகேயன்
ஒரு பக்கம் நடிகர் இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் என அசத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். வாழ், சமீபத்தில் வெளியான குரங்கு பெடல் உள்ளிட்ட படங்களை தனது எஸ்.கே ப்ரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்து வெளியிட்டுள்ளார். மேலும் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தையும் எஸ்.கே ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் பரவலான அங்கீகாரத்தைப் பெற்று கவனமீர்த்து வருகிறது.
அமரன்
இன்னொரு பக்கம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்.கே 23 படத்திலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்திலும் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார். இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய இருக்கிறது. மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையைத் தழுவி உருவாகி வரும் இப்படத்தினை கமலில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. சாய் பல்லவி இதில் நாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகி கவனமீர்த்தது.
படக்குழுவுக்கு பிரியானி பரிமாறிய சிவகார்த்திகேயன்
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் அமரன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முதற்கட்டமாக 75 நாட்கள் காஷ்மீரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இன்னும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை முன்னிட்டு அமரன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் சிவகார்த்திகேயன் தனது கையால் பிரியாணி பரிமாறிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அமரன் திரைப்படம் சுதந்திர தினத்தன்றோ அல்லது ஆகஸ்ட் மாதத்தில் புஷ்பா 2 படத்துக்கு போட்டியாகவோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.கே 23
அமரன் படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவரது 23ஆவது படமாக உருவாகும் இப்படத்தில் கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசைமைத்து வருகிறார். ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் இப்படத்தை தயாரிக்கும் நிலையில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் சுதீப் எளமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க : Actress Shoba: முதலிரவில் நடந்த சம்பவம்! நான் செய்த மிகப்பெரிய தப்பு! - கண்ணீர் கதையை பகிர்ந்த பிரபல நடிகை ஷோபா