மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ஷோபா விஸ்வநாத் பின்னணி கதை ரசிகர்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சின்னத்திரையில் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை மலையாளத்தில் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த சீசன் 5ல் போட்டியாளர்களில் ஒருவரான ஷோபா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 99 நாட்களும் தாக்குப்பிடித்து 4வது இடம் பிடித்தார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து பேசினார்.


பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அவர் நேர்காணல் ஒன்றில், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்தும், தனது தோழியால் ஏமாற்றப்பட்டதையும் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.அதாவது, “பொருளாதார வசதிகளுடன் நன்கு படித்த, நல்ல வேலையில் இருந்தவரை திருமணம் செய்து கொண்டேன். அங்கு உடல் மற்றும் மன ரீதியான தாக்குதலை எதிர்கொண்டேன். இந்த விஷயத்தில் நான் என்னை பாதிக்கப்பட்டவள் என குறை சொல்ல மாட்டேன். அங்கு அப்படி நடந்ததால் தான் நான் இங்கு இப்படி இருக்கிறேன். 


என் குடும்பத்தினர் திட்டமிட்டபடி நடந்த திருமணம் தான் அது. முதலிரவுக்கு குடித்து விட்டு தான் வந்தார். அன்றே அவர் ஒரு குடிகாரர் என தெரிந்தது. எனக்கு நிறைய பேரிடம் திருமணம் செய்ய விருப்பம் என மனுக்கள் வந்த நிலையில் அவர் தான் என்னுடைய தேர்வாக இருந்தது. 


நான் திருமணத்துக்கு ஒருவாரம்  முன்னால் தான் ஊருக்கு வந்தேன். அடுத்த சில நாட்களில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அன்றைக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் என்னிடம் இருந்தது. ஆனால் விசாரிக்காமல் வீட்டில் சொன்ன ஒரே காரணத்திற்காக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். நான் செய்த தப்பே அதுதான். இன்றைக்கு இருக்கும் குழந்தைகளுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். என்னைப்போன்று யாரும் அந்த தப்பை செய்யாதீர்கள்.


நான் அவருடன் கிட்டதட்ட மூன்றரை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தேன். அவரை புரிந்து கொண்டு வாழ முயற்சித்தேன். ஆனால் அவரால் நான் மன மற்றும் உடல் அளவில் டார்ச்சரை அனுபவித்தேன். என்னால் இப்பவும் அவருடன் இவ்வளவு காலம் இருந்தேன் என்பதை நம்ப முடியவில்லை. அந்த வாழ்க்கை தான் என்னை மிகவும் உறுதியானவளாக மாற்றியது” என ஷோபா தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்ட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.