சமீபத்தில் ஜொமோட்டொ ஐபிஓ வெளியானது. அதனை தொடர்ந்து பேடிஎம் கார்ட்ரேட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஐபிஓவுக்கு விண்ணப்பித்திருக்கின்றன. இதில் நய்கா (Nykaa) நிறுவனத்தின் ஐபிஓ குறித்து பெரிதாக யாரும் கவனிக்கவில்லை.


மற்ற நிறுவனங்களுக்கும் இந்த நிறுவனங்களும் பல வேற்றுமைகள் இருக்கின்றன.


* இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இதில் பெண் உருவாக்கிய நிறுவனம் இது.


* ஐஐஎம் அல்லது ஓரிரு ஆண்டுகள் பெரிய கார்ப்பரேட்களில் வேலை செய்த பிறகு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்குவார்கள். ஆனால் கோடக் மஹிந்திரா வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்து விலகி 49வயதில் ஒரு பெண் தொடங்கிய நிறுவனம் இது.




* இதுவரை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்றாலே தள்ளுபடி கொடுத்து வளர்ந்த நிறுவனம் என்னும் பிம்பம் தான் இருக்கிறது. அதேபோல ஸ்டார்ட்ப் அப் நிறுவனங்கள் லாபம் ஈட்டாது என்ற பிம்பமும் இருக்கிறது. இது இரண்டையும் நய்கா உடைத்திருக்கிறது. மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் போல தள்ளுபடி கொடுப்பதில்லை. அதேபோல இந்த நிறுவனம் லாபத்தில் செயல்பட்டுவருகிறது.


 * ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பங்குகளை விலக்கிக்கொண்டு நிதி திரட்டிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் கூடுதல் நிதி தேவைப்படாத லாபம் ஈட்டும் பிஸினஸ் மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. புரிதலுக்காக சொல்ல வேண்டும் என்றால் பேடிஎம் நிறுவனத்தில் அதன் நிறுவனர் விஜய்சேகர் சர்மா வசம் 14 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளன. ஆனால் நய்கா நிறுவனர்கள் வசம் 51 சதவீத பங்குகள் உள்ளன.


இந்த நிறுவனத்தை உருவாக்கிய அந்த பெண் ஃபல்குனி நாயர்.


ஆரம்பகாலம்


மும்பையில் பிறந்தவர். அங்குள்ள Sydenham College கல்லூரியில் இளங்கலை படித்தார். அதனை தொடர்ந்து ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ படித்தார். அங்குதான் கணவர் சஞ்சய் நாயரை சந்தித்தார்( இந்தியாவின் முக்கியமான பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான கே.கே.ஆர். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்)


ஏஎப் பெர்குசன் நிறுவனத்தில் ஆலோசகராக இணைந்தர். அதனை தொடர்ந்து 1993-ஆம் ஆண்டு கோடக் மஹிந்திராவில் இணைந்தார். 2005-ஆம் ஆண்டு கோடக் மஹிந்த்ரா வங்கி இன்வெஸ்ட்மெண்ட் பேங்கின் பிரிவின் நிர்வாக இயக்குநராக உயர்ந்தார்.


இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங் என்பது நிறுவனங்களை ஐபிஓ கொண்டு வருவதற்காக பணிகளை செய்யும் நிறுவனம்.  ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் உரையாடுவது முக்கியமான பணி. அதனால் ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார். 50 வயதுக்குள் தொடங்க என திட்டமிட்டு அதற்கான ஆரம்பகால திட்டங்களை வகுத்தார். தொழில் தொடங்க வேண்டும் என வீட்டில் கூறியவுடன் வழக்கம்போலவே எதிர்ப்பு. அம்மா வேண்டாம் என்று சொல்லுகிறார். மகன், `அம்மா உங்களுக்கு Mid life Crisis? வந்துவிட்டதா’ என கேட்டிருக்கிறார். (அதாவது நடுத்தர வயதில் ஒரு கட்டத்துக்கு மேல் நிறுவனத்தில் வளர்ச்சி அடைய முடியதா சூழல் உருவாகும், அதனை மிட் லைப் கிரைசஸ் என கூறுவார்கள், இது குறித்து பிறகு விரிவாக பார்க்கலாம்)


இந்த எதிர்ப்புக்கு இடையில் பெரிய வங்கியின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து ராஜினமா செய்தார்.




அழகுசாதன பொருட்கள்


வளரும் நாடுகளில் அழகுசாதன பொருட்கள் என்பது மிகப்பெரும் சந்தை. ஆனால் இந்தியாவில் அதற்கு பெரிய சந்தை உருவாகவில்லை. அமெரிக்காவில் ஒரு மாலுக்கு சென்றால் தரைத்தளம் முழுவதுமே அழகுசாதன பொருட்களுக்கான ஷோரூம்கள் இருக்கும். வளரும் நாடுகளிலும் இதே நிலைதான். ஆனால் இந்தியாவில் இதற்கு பெரிய சந்தை இருக்கிறது என்பதை கண்டறிந்து `நய்கா’ தளத்தை தொடங்கினார்.


இவரது இரட்டை குழந்தைகள் அமெரிக்காவில் படித்துவந்தனர். அவர்களை பார்க்க அடிக்கடி அமெரிக்கா செல்லும்போது இந்த ஐடியா தோன்றி இருக்கிறது. தற்போது இவரது இரு குழந்தைகளும் நய்காவில் வேலை செய்கின்றனர்.


நய்கா என்றால் கதாநாயகி (ஹீரோயின்) என்று அர்த்தம். 2012-ஆம் ஆண்டு பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஓரளவுக்கு வளர்ச்சியும் பிரபலமும் அடைந்திருந்தது. அதனால் முதலில் இ-காமர்ஸ் பிரிவில் மட்டுமே ( 2012-ஆம் ஆண்டு) நய்கா தொடங்கப்பட்டது. இவர் நிதி சார்ந்த நபர். பைனான்ஸ் இவருக்கு எளிது. ஆனால் இ-காமர்ஸ் நிறுவனம் நடத்த ரீடெய்ல், டெக்னாலஜி மற்றும் பியூட்டி புராடக்ட்ஸ் குறித்து தெரிந்திருக்க வேண்டும். ஆனால் சந்தையில் இருக்கும் வாய்ப்பு பெரியது என்பதால் இதற்கு ஏற்ற வல்லுநர்களை வைத்து நிறுவனத்தை தொடங்கினார்.


ஆரம்பநாட்களில் ஒரு நாளைக்கு 60 ஆர்டர்கள் வந்திருக்கிறது. முதல் மாதத்தில் தினமும் 1,000 ஆர்டர்கள் வரத்தொடங்கின. இந்த ஆர்டர்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தது. ஒரு நாளைக்கு 3,000 ஆர்டர்கள் வரும் வரை மொத்த ஆர்டர்களையும் இவரே கவனித்திருக்கிறார். தற்போது ஒரு மாதத்துக்கு 1.3 கோடி ஆர்டர்கள் வருகின்றன. 2012-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 100 சதவீத வளர்ச்சியை இந்த நிறுவனம் அடைந்திருக்கிறது.


கடந்த நிதி ஆண்டில் ரூ.2,450 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டி இருக்கிறது. நிகர லாபமாக ரூ.61 கோடி உள்ளது. சர்வதேச அளவில் 2,500-க்கும் மேற்பட்ட பிராண்ட்கள் இந்த தளத்தில் உள்ளன. இதுதவிர இந்தியாவின் முக்கியமான நகரங்களில் 73-க்கும் ஸ்டோர்களும் (38 நகரங்களில்) செயல்பட்டுவருகின்றன. 2015-ம் ஆண்டு முதல் ஸ்டோர்களை தொடங்கியது. மேலும் சொந்தமாக நய்கா காஸ்மெட்டிக்ஸ், நய்ஹா நேச்சுரல்ஸ் உள்ளிட்ட பல சொந்த பிராண்ட்களையும் நய்கா உருவாக்கி இருக்கிறது.




ரூ.4,000 கோடி திரட்ட திட்டம்


இதில் ரூ5.25 கோடி புதிய பங்குகள் மூலம் நிதி திரட்டப்படுகிறது. மீதமிருக்கும் தொகையை ஏற்கெனவே முதலீடு செய்த முதலீட்டாளர்க விற்க இருக்கிறார்கள். டிஜிபி லைட் ஹவுஸ் இந்தியா பண்ட், ஜே.எம். பைனான்ஸியல், சுனில் காந்த் முஞ்சாரல் உள்ளிட்ட சில முதலீட்டாளர்கள் வெளியேறுகிறார்கள். இந்த ஐபிஓவுக்கு பிறகும் பெரும்பான்மையான பங்கு இவர் குடும்பத்தின் வசமே இருக்கும்.


இந்த நிதியை மார்கெட்டிங் (ரூ.200) கடனை அடைப்பது (ரூ130 கோடி), வேர்ஹவுஸ் (ரூ.35 கோடி) மற்றும் புதிய ஷோ ரூம்களுக்கு (ரூ.35 கோடி) என செலவு செய்ய இருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4-5 பில்லியன் டாலர் நிறுவனமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.30,000 கோடி


இ-காமர்ஸ் துறையில் குறிப்பிட்ட பிரிவை எடுத்து அதில் தவிர்க்க முடியாத வெற்றியை அடைந்திருக்கிறார் பல்குனி நாயர்.