தமிழ் சினிமாவில் சுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரை அனைவருக்கும் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் மெகா ஹிட் ஆன நிலையில், அடுத்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு களமிறங்குகிறது. டான் திரைப்படம் வசூலில் 100 கோடியை எட்டி சாதனையும் படைத்திருந்தது.
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா நடிப்பில் அக்டோபர் 21ஆம் நாள் வெளியாக இருக்கும் திரைப்படம் பிரின்ஸ். இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. சிவகார்த்திகேயன் ஒரு பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது பிரின்ஸ் திரைப்படத்தின் அமெரிக்க ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் அக்டோபர் 20 ஆம் நாள் (வியாழக்கிழமை) அமெரிக்காவில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகிறது. அமெரிக்க நேரத்தின் படி மாலை 7.30 மணியளவில் வெளியாகிறது பிரின்ஸ் திரைப்படம். இந்திய நேரப்படி அது காலை 5 மணி ஆகும். எனவே அக்டோபர் 21 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் அமெரிக்காவில் முந்தைய நாளான வியாழன் அன்றே வெளியாகிறது.
இந்த திரைப்படத்திற்கு 'U' சென்சார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திரைப்படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஆகும். வழக்கம்போல தனது நகைச்சுவை திறனாலும் நவரச நடிப்பாலும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்வாரா என்பதை காத்திருந்து காண்போம்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக அயலான் உருவாவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.