நடிகர் சிவகார்த்திகேயனின் புது லுக் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மாவீரன் சிவகார்த்திகேயன்:


நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன், அயலான் திரைப்படங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக உள்ளன. அயலான் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தியின் ஜப்பான், கார்த்திக் சுப்பாராஜின் ஜிகர்தண்டா 2 படங்களுடன் மோத உள்ளன. அதேபோல் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அதிதி சங்கருடன் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் வரும் ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ளது.


அயலான் படம் நீண்ட நாள்கள் கிடப்பில் போடப்பட்டு இறுதியாக வெளியீட்டை  இரு எட்டியுள்ள நிலையில், இந்த இரு படங்களையும் முடித்து கொடுத்து சிவகார்த்திகேயன் உற்சாகத்துடன் வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்துள்ளார்.


எஸ்.கே.21:


இந்நிலையில் தன் அடுத்த படமான எஸ்கே 21 படத்தில் ரங்கூன் படத்தை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் சிவகார்த்திகேயன் பணியாற்ற உள்ளார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தினை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 


வைரலாகும் கெட்டப்:


முன்னதாக இப்படத்தின் பூஜை படங்கள் வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளின. இந்நிலையில் தன் அடுத்த படத்துக்கான புது கெட் அப்பில் சிவகார்த்திகேயன் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


மேலும் நடிகர் தர்ஷன் உடன் சிவகார்த்திகேயன் உடல் எடை கூட்டியும், தன் புது ஹேர்ஸ்டைலை மறைத்தும் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.


 






நடராஜனின் வாழ்க்கை வரலாறு:


மற்றொருபுறம் நடிகர் சிவகார்த்திகேயன் தன் 22ஆவது படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும், கிரிக்கெட் வீரர் நடராஜன் பற்றியதாக இப்படம் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்ட்டியைச் சேர்ந்தவரான கிரிக்கெட் வீரர் நடராஜன் ஐபிஎல் தொடர்களில் தொடங்கி 2020ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியத் தொடரில் கவனம் ஈர்த்து பாராட்டுக்களை அள்ளினார். 


நடராஜன் தற்போதைய ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிக்காக விளையாடிய நிலையில், இவரது வாழ்க்கை, கிரிக்கெட் பயணம் குறித்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. மேலும் இப்படத்தை சிவகார்த்திகேயன் இயக்கலாம் எனவும் முன்னதாகத் தகவல்கள் வெளியான நிலையில், விரைவில் இந்தப் படத்துக்கான பணிகளை சிவகார்த்திகேய தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.