இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு சிறப்பான வரவேற்று அளிக்கப்பட்டது.
ஜப்பானில் முதலமைச்சர்:
ஜான்சாய் விமான நிலையத்தில் அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி மலர்கொத்து வழங்கி வரவேற்றார். நாளையும் (16.05.2023), நாளை மறுநாள் (27.05.2023) ஒசாகா நகரில் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், ஜப்பான் நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும் சந்திக்க உள்ளார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவரவும், வரும் 2024 ஜனவரியில் சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் அரசுமுறை பயணமாக, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்.
வெளிநாட்டு பயணம்:
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலத்திற்கு தேவையான தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் 2 நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார்.
அங்கு அவருக்கு அரசு சார்பிலும், தமிழ் மக்கள், தமிழ் அமைப்புகள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிங்கப்பூரில் வசித்து வரும் முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்து பேசினார். பின்னர், சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டிற்குமான தொடர்புகள் குறித்தும், ஆராய்ச்சி முடிவுகள் பற்றியும் பேசினார். மேலும் சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லி குவான்யூவுக்கு தமிழ்நாட்டில் மன்னார்குடியில் நினைவுச்சின்னமும், நூலகமும் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதற்கிடையில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஜப்பான் பயணம்:
ஜப்பானிய உறவை மேலும் மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு, முதலீட்டு குழுவுக்கு தலைமையேற்று ஜப்பான் சென்றிருக்கிறார். அங்கு முன்னணி தொழில்துறை தலைவர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். ஜப்பானில் நடைபெறும் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் :
இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும், பல முன்னணி தொழில் நிறுவனங்களை கொண்ட ஒசாகாவுக்கும் முதல்முறையாக தமிழக முதலமைச்சர் தலைமையிலான குழு செல்கிறது. ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான, ஜெட்ரோவுடன் இணைந்து அங்கு நடக்க உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கிறார். ஒசாகா வாழ் இந்திய சமூகத்தினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
டோக்கியோவில் அந்நாட்டு பொருளாதாரம், வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் நிஷூமுராயசுதோஷி மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனமான ஜெட்ரோதலைவர் இஷிகுரோ நொரிஹிகோ ஆகியோரை சந்திக்கிறார். 200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்கிறார். இங்கு, கியோகுடோ, ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மே 31-ம் தேதி சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்:
ஜப்பானில் 6 நாட்கள் வரை தங்கியிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 31-ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.