தேசிய விருது வென்றவரும், தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளருமான டி.இமான் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் சிவகார்த்தியேன் உடனான பிரச்னை பற்றி அதிர்ச்சித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது:


‘என் இசையில் தான் முதலில் பாடினார்’


"நாங்கள் இருவரும் முதலில் மனம் கொத்திப் பறவை படத்தில் பணியாற்றினோம். அந்தப் படம் வேலை செய்யும்போது அவரது முதல் படம் ரிலீசாகவில்லை. விஜய் டிவியில் அவர் பணியாற்றிய அது, இது, எது நிகழ்ச்சியை பார்த்துவிட்டு எழில் சார் என்னிடம் கேட்டார்.. “இது சரியாக இருக்குமா, ஹீரோவாக யாரை போடலாம்” எனக் கேட்டார். 


அப்போ “சிவகார்த்திகேயன் இருந்தால் சரியாக இருக்கும்” என்று பேசினோம். எல்லாருக்கும் அவரது திறமை மூலமாக அவரைத் தெரியும். பயங்கரமான கடின உழைப்பாளி. அப்போல இருந்து இப்போ வரை... அவருடைய உழைப்பு தான் அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கு.  மனம் கொத்திப் பறவைல ஆரம்பிச்சது, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை என எல்லாமே பாடல்களாகவும் திரைப்படங்களாகவும் மேஜர் ஹிட்ஸ். 


மிகச்சிறந்த திறமைசாலி. அவர் முதலில் பாடினதும் என் இசைலதான். ஊரக்காக்க உண்டான சங்கம் பாடலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாடினார்” என்றான்.


மிகப்பெரிய துரோகம்..


தொடர்ந்து இருவரும் ஏன் தற்போது இணைந்து படங்கள் செய்வதில்லை, என்ன பிரச்னை எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த டி.இமான், “ எனக்கு தெரிஞ்சு இந்த ஜென்மத்தில் அவருடன் மீண்டும் சேர்ந்து பயணிப்பது கஷ்டம். தனிப்பட்ட காரணங்கள் இருக்கு. அவர் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம்.. அதை வெளியில் சொல்ல முடியாது. வருங்காலத்துல அவர்கூட சேர்ந்து பயணிக்க முடியாது. அடுத்த ஜென்மத்துல நானும் இசையமைப்பாளரா இருந்து அவரும் நடிகரா இருந்தா அது நடக்கலாம்.


சில விஷயங்கள் வேண்டாம் என்று முடிவு செய்கிறோம். ரொம்ப யோசிச்சு எடுத்த முடிவு தான் இது. நான் இதை மெதுவாக தான் உணர்ந்தேன். என்னுடைய பங்குக்கு அவரிடம் இது பற்றி பேசிவிட்டேன். சில விஷயங்கள நான் மூடி மறைக்கிறேன் என்றால், அதற்கு குழந்தைகளின் எதிர்காலம் தான் காரணம். 


பணத்துக்காக வேலை பார்க்க முடியாது..


நான் யார்னு எனக்கு தெரியும். என்னை படைத்தவர் யார்னு எனக்கு தெரியும். இறைவனுக்கும் எனக்கும் நான் வாழ்ற வாழ்க்கை, குடும்பம், சமூகத்துக்கு சரியா இருக்கேனா, அறம்  சார்ந்து வாழ்க்கை வாழ்கிறேனா என்பதே எனக்கு முக்கியம்.


வாழ்க்கையில் நான் பட்ட துன்பங்கள், வலி, வேதனைகளுக்கு இவர் மட்டுமே காரணம் என்று இல்லை, இவரும் ஒரு காரணம். இத்தனை ஆண்டுகளாக குடும்பமா பழகி அவர் மூலமா இதெல்லாம் நடந்தது வேதனை அளிக்கிறது. வெறும் பணத்துக்காக வேலை பார்க்க முடியாது. பாசத்துடன் நேசத்துடன் வந்தவர்களுடனேயே நான் பணியாற்றியுள்ளேன்" எனப் பேசியுள்ளார்.