என் அப்பாவின் நிறைவேறாத ஆசை என்றால் அது அவர் பெரியாராக நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டது தான் என்று நடிகர் சிவாஜியின் மகனும் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ராம்குமார் கணேசன் தெரிவித்துள்ளார்.


வி.சின்னையா மன்ராயர் கணேசமூர்த்தி - சிவாஜி கணேசன் ,நடிகர் திலகம் ஒரு சிறந்த நடிகர் , தயாரிப்பாளர் தமிழ், ஹிந்தி , மலையாளம் , தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் சிவாஜி கணேசன், ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த சினிமா வாழ்க்கையில், 288 படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை பாராட்டி தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். இவர் நடித்த சரித்திர வீரா்களின் கதாபத்திரங்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை.


1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்ரோ-ஆசிய திரைப்பட விழாவில் சர்வதேச திரைப்பட விழாவில் "சிறந்த நடிகர்" விருதை வென்ற முதல் இந்திய திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன். அவரது மரணத்தின் பின்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் அவரை "தென்னிந்திய திரையுலகின் மார்லன் பிராண்டோ" என்று விவரித்தது. சிவாஜி கணேசனுக்கு இந்தியாவில் திரைப்படங்களுக்கான மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் மற்றும் டெஸ் லெட்டெரஸின் செவாலியர் ஆன முதல் இந்திய நடிகரும் இவரே.


நடிகர் திலகம் சிவாஜி விருந்தோம்பலுக்கு பெயர் போனவர். அவர் சொல்லிக்கொடுத்த அதே அறத்தைத்தான் இன்றைக்கு அவரது குடும்பமும் பின்பற்றி வருகிறார்கள். இளைய திலகம் பிரபுவும் சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களுக்கும் வீட்டில் இருந்து சாப்பாடு சமைத்து எடுத்து வர சொல்லிவிடுவார். குறிப்பாக அதில் சாப்பிடும் நபர்களுக்கு பிடித்த உணவும் இருக்கும் என்பதுதான் ஹைலைட். 


இப்படி சிவாஜி கணேசனும் அவரின் குடும்பமும் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாதது. சிவாஜியைப் பற்றி அவரது மகன் ராம்குமார் கணேசன் அளித்த பேட்டியொன்றில் தனது தந்தையின் நிறைவேறாத ஆசை பற்றி பேசியிருக்கிறார்.


அப்பாவின் நிறைவேறாத ஆசை:


என் அப்பாவின் நிறைவேறாத ஆசை என்றால் அது அவர் பெரியாராக நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டது தான். அப்பாவுக்கு அதுபோல் பாரதியாராக நடிக்க வேண்டும் என்றும் ஆசை. அதனால்தான் கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஒரு பாடலிலேயே வாழ்ந்திருப்பார். அப்பா எல்லாத்தையும் நேரத்துக்கு செய்வார். காலை 7 மணிக்கு எழுவார். 8 மணிக்கு ரெடியாவார். 8.15 மணிக்கு பிரேக் ஃபாஸ்ட் .1.30 மணிக்கு லஞ்ச். இரவு 9 மணிக்கு அப்பா சாப்பிட்டு படுத்துவிடுவார்.


அதுபோல் அப்பா ரொம்ப பிராட் மைண்டட். அப்பா எனது ஃபிரண்ட்ஸ் கூட நல்லா பழகுவார். என்னுடைய ஃப்ரெண்ட்ஸில் 60% பேர் வட இந்திய நண்பர்கள். பஞ்சாபி , மார்வாடி, பார்ஸி நண்பர்களே அதிகம். அவர்களின் வீட்டு விஷேசங்களுக்கு எல்லாம் அப்பா சென்று வருவார். அப்பா நைட் சாப்பிட்டதும் ராம் கிட்ட நான் சாப்பிட்டுவிட்டேன் என்று சொல்லுங்கள் என்று சொல்லியனுப்புவார். அப்படியென்றால் நான் பார்ட்டிக்கு செல்லலாம் என்று அர்த்தம்.


அப்பா எங்களை ரொம்ப சுதந்திரமாக வளர்த்தார். எங்களுக்கு நல்ல பண்புகளை சொல்லித் தந்தார். அப்பாவுடைய நாடகங்கள் பலவற்றை நான் ரசித்துப் பார்த்துள்ளேன். ஜஹாங்கிர், தேன் கூடு, வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம், சாம்ராட் அசோக் போன்ற நாடகங்களைப் பார்த்துள்ளேன். இதில் ஜஹாங்கிர் தான் எனது ஃபேவரைட்