ஜி.வி பிரகாஷ் - சைந்தவி


இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி (Saindhavi - G V Prakash) ஆகிய இருவரும் தங்கள் திருமண உறவை முடித்துக் கொள்ள இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஜி.வி பிரகாஷ் குறித்து பல்வேறு அவதூறுத் தகவல்கள் பரவி வந்தன. 


இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் " தனது எக்ஸ் பக்கத்தில்


புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது.பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?


இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” என பதிவிட்டார்.


ஜி.வி பிரகாஷைத் தொடர்ந்து தற்போது பாடகி சைந்தவி தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்






இந்தப் பதிவில் அவர் “ எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மரியாதை அளிக்கும்படி நாங்கள் கேட்டுக் கொண்ட பிறகும் யூடியுப் சானல்கள் பல தவறான கருத்துக்களை பரப்புவது மன வருத்தம் அளிக்கிறது.  எங்கள் விவாகரத்துக்கு எந்த விதமான வெளியாட்களும் காரணமில்லை. ஆதாரமில்லாமல் ஒருவரது கேரக்டரை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எங்கள் இருவரின் நலனுக்காக இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு. எங்கள் பள்ளி காலத்தில் இருந்து நானும் ஜி.வி பிரகாஷும் கடந்த 24 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகிறோம். இனிமேலும் எங்களின் இந்த நட்பு தொடரவே செய்யும்” என்று அவர் கூறியுள்ளார்