தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதுமே பாடல்களுக்கு தனி வரவேற்பு கொடுப்பவர்கள். அப்படிப்பட்ட தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க ஒரு பாடகருக்கு சிறந்த பாடல் அமைந்தால் போதும். அதன் பின்னர் அந்த பாடகருக்காவே பாடல்களை ரசிகர்கள் பாடல்களை ”ஹிட்” பாடலாக மாற்றி விடுவார்கள்.
அப்படிபட்ட பாடல்களைப் பாடியவர் தான் பாடகி மின்மினி. இவர் தமிழ் சினிமாவில் 1991ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை மட்டும் தான் பாடினார். ஆனால் அதற்குள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர். இவரது குரலில், மெதுவா தந்தி அடுச்சானே மச்சானே, அடி பூங்குயிலே பூங்குயிலே, அம்மன் கோவில் வாசலிலே போன்ற பாடல்களைப் பாடியுள்ளார். பாடகி மின்மினி, இளையராஜா, தேவா, வித்யாசாகர், கீரவாணி இசையில் பாடியுள்ளார்.
ஒருமுறை, இசைஞானி இளையராஜா இசையில் பாடுவதற்காக, பாடகர் மனோவுடன் ஏவிஎம் ஸ்டூடியோவில் தயாராக இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த இளையராஜா பாடல் பாடுவதற்கான சில அறிவுரைகளை வழங்கினார். அதன் பின்னர் வெளியே சென்றவர், மீண்டும் வந்த போது, “ஏன் மற்றபக்கமெல்லாம் பாடச் செல்கிறீர்கள்? இங்கு பாடுவது மட்டும் போதாதா?” எனவும் கேட்டுள்ளார். அதன் பின்னர், தான் மிகவும் மனமுடைந்து அழுததாகவும் தன்னை பாடகர் மனோதான் சமாதானப்படுத்தியதாகவும் கேரளாவில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் அந்த பேட்டியில், 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா திரைப்படத்தில் ‘சின்னச் சின்ன ஆசை’ பாடலைப் பாடிய பின்னர், இளையராஜா தன்னை பாட அழைக்கவில்லை என கூறியுள்ளார். அவர் என்னை அழைக்காதற்கு அதுதான் காரணமா எனவும் தெரியவில்லை. மேலும் நான் மற்ற இசையமைப்பாளர்களிடம் பாடியது இளையராஜாவுக்கு தெரியுமா தெரியாதா எனத் தெரியவில்லை எனவும், ஆனால் ரகுமானுக்கு பாடிய பின்னர் தான் இளையராஜா தன்னை பாட அழைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
அதேபோல், நான் இதனை இவ்வளவு நாள் கூறாமல் இருந்ததற்கான காரணம் யாரும் ராஜா சாரை தவராக எண்ணிவிடக்கூடாது என்பது தான். ஆனால், இப்போது நீங்கள் கேட்டதால் தான் கூறினேன் எனவும் கூறியுள்ளார்.
பாடகி மின்மினி, 90களில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பாடினார். 1994ஆம் ஆண்டு வரை பாடிய மின்மினி அதன் பின்னர் தனக்கு இருந்த குரல் பிரச்னையால் பாடாமல் இருந்தார். அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு அமலா பால் நடித்த படத்தில் பாடினார்.
இந்நிலையில் தற்போது பாடகி மின்மினி இசையமைப்பாளர் இளையராஜா குறித்து கூறியுள்ளது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.