‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடலை பாடிய பாடகி எம். எம். மானசி, அந்தப்பாடலை பாடிய அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து எம். எம். மானசி பேசும் போது “உண்மையிலேயே நான் விஜய் சாருடன் பாட வேண்டும் என்று மிக நீண்ட நாட்களாக ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். ஏன் என்று சொல்கிறேன். ‘தலைவா’ படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடலை விஜய் பாடியிருந்தார். அந்தப்பாடலின் இடையில் ஒரு சின்ன ஹம்மிங் ஒன்று வரும். அதனை பாடுவதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் என்னை அழைத்திருந்தார். நானும் சென்று பாடினேன். அப்போது எனக்கு இப்போது விஜய் சாரின் பாடலில் ஹம்மிங் பாடிவிட்டோம். அவர் உடன் ஒரு டுயட் பாடினால் நன்றாக இருக்குமே என்று ஆசை வந்தது. ஆனால், அது ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலில் சாத்தியமானது.” என்று பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாரிசு படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த ஜூன் 21 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் கசிந்ததால் படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறியது. 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில 2 மாதங்களே இருப்பதால் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க போவது நிச்சயம்.
அந்த வகையில் தீபாவளிக்கு வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புது போஸ்டர் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (நவம்பர் 3) வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமனின் இசையில் பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகியுள்ள இந்தப்பாடலை நடிகர் விஜய் மற்றும் பாடகி எம்.எம்.மானசி ஆகியோர் பாடியுள்ளனர். நேற்று மாலை 5 மணிக்கு இந்தப்பாடல் வெளியான நிலையில், பலரும் இந்தப்பாடல் மொச்சக்கொட்ட பல்லழகி பாடல் போன்று இருப்பதாக கூறி ட்ரோல் செய்து வருகின்றனர்.