அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 


அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பொன்னியின் செல்வன்' எனும் பெயரில் இரண்டு பாகங்களாக தயாரித்து இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. மக்களிடம் அமோக வரவேற்பை பெற்ற இந்தப்படம், உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப்படம் கடந்த 4 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், அங்கும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 


 







இந்நிலையில் இந்த பிரமாண்ட வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைந்த அமரர் கல்கிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,  லைகா குழுமம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒரு கோடியை ரூபாயை நன்கொடையாக வழங்க முன்வந்தனர். இதற்காக கல்கியின் மகன் வீட்டிற்கு வந்த அவர்கள், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன்  முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் திருமதி சீதா ரவியிடம், ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினர். 


பொன்னியின் செல்வன் படத்தை பலர் பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அதற்கு இயக்குநர் மணிரத்னம் அளித்த பதில் இங்கே!


இது குறித்து மணிரத்னம் பேசும் போது, “ ராஜராஜ சோழன் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த அரசராக இருந்தவர். அவர் பற்றி எடுக்கும் போது நேர்மையாக, உண்மையாக இருக்க வேண்டும். அதே போல அதனுடன் பயணிக்கும் கேரக்டர்களும் உண்மையாக இருக்க வேண்டும். இந்தக்கதை வந்தியத்தேவன் வழியாக வரும். அவன் கண்வழியாகத்தான் நாம் கதையை பார்க்கிறோம்.


அதனால் இது ஒரு யதார்த்தமான படைப்பு. அதனால் இதில் பாகுபலி போல அதித கற்பனை சார்ந்த காட்சிகள் இருக்காது. சூப்பர் ஹீரோக்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் இதில் எல்லாமே ரியலிஸ்ட்டிக்கா இருக்கும். பாடல்கள், இடங்கள் எல்லாமே அப்படித்தான் இருக்கும். அதனால் பாகுபலி, பொன்னியின் செல்வன் ஆகிய இருபடங்களும் வெவ்வேறு ஜானர்கள் கொண்டவை.” என்றார்.