பாடகர் கே.கேவின் மரணம் தொடர்பாக கொல்கத்தா காவல்துறை சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் - KK என பிரபலமாக அறியப்பட்டவர். அவருக்கு வயது 53. நேற்று இரவு கொல்கத்தாவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவர் காலமானார். இவருடைய மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, வெங்கய்யா நாயுடு மற்றும் பிரபலங்கள், ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாடகர் கே.கேவின் மரணம் தொடர்பாக கொல்கத்தா காவல்துறை சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருடைய உடல் பிரேத பரிசோதனை இன்று செய்யப்பட உள்ளது. இந்த பிரேத பரிசோதனைக்கு பிறகு முழுமையான விவரம் தெரியவரும் என்று கருதப்படுகிறது. பாடகர் கே.கே.வின் உடல் பிரதே பரிசோதனைக்கு பிறகு அவருடைய குடும்பத்தினரிடம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர் கேகே மரணம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ஒரு இரங்கல் பதிவை செய்துள்ளார். அதில், “பன்மொழிகளிலும் பாடி ரசிகர்களை மகிழ்வித்த கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள்.”எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பாடகர் கிருஷ்ணகுமார் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன்னுடைய பாடல்கள் மூலம் பல்வேறு விதமான உணர்ச்சிகளை திரையில் கொண்டு வந்தார்.அவரை எப்போதும் அவருடைய பாடல்கள் மூலம் நான் நினைவில் கொள்வோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
பாலிவுட் பாடகி ஸ்ரேயா கோஷல்,”என்னால் இந்த செய்தியை ஏற்று கொள்ளவே முடியவில்லை.என்னுடைய இதயம் துண்டு துண்டாக உடைந்துள்ளது” எனப் பதிவிட்டிருந்தார். இவர்கள் தவிர குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் அவருடைய மரணம் தொடர்பான இரங்கல் பதிவை செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்