Singer Chitra: பிரபல பின்னணிப் பாடகி சித்ரா, தன் மறைந்த மகளின் பிறந்த நாளான இன்று உருக்கமான வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.
சின்னக்குயில், இசைக்குயில் என ரசிகர்களால் அழைக்கப்படும் சித்ரா கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் முன்னணி பின்னணி பாடகியாக கோலோச்சி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, இந்தி, அசாமி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி தனக்கென தனி இடத்தைப் பிடித்த சித்ரா, ரசிகர்கள் என்றென்றும் விரும்பும் குயிலிசைப் பாடகி. இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம்.
சித்ரா இதுவரை ஆறு முறை தேசிய விருதுகளையும், 6 முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும், பல்வேறு மாநில விருதுகளையும், இந்தியாவின் மிக உயரிய பத்மவிபூஷண் விருதையும் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட சித்ரா, 1988ம் ஆண்டு விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2002ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நந்தனா எனத் தங்கள் குழந்தைக்கு சித்ரா -விஜய் சங்கர் பெயரிட்டனர். இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து நந்தனா தன் 9ஆம் வயதில் உயிரிழந்தார். தனது மகளை இழந்த பாதிப்பில் சித்ரா உருக்குலைந்து போன சூழலில், அவருக்கு திரையுலகினர் பக்கபலமாக இருந்தனர். இந்நிலையில், மகளை இழந்து ஒவ்வொரு ஆண்டும் மனம் வருந்தும் சித்ரா, தன் மகளின் பிறந்த நாளில் உருக்கமான பதிவினைப் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் இன்று தனது மகளின் பிறந்த நாளை ஒட்டி பாடகி சித்ரா, தனது பேஸ்புக் பக்கத்தில் நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், “நீ என் இதயத்தை துளைத்து விட்டு சென்றுள்ளாய். அதை என்னால் என்றும் நிரப்பவே முடியாது. நீ என்னை விட்டு போன பின் ஒவ்வொரு நாளும் நான் உன்னை அதிகமாக இழந்து வாடுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா” எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இதே நாளில் சித்ரா வெளியிட்ட தனது பதிவில், “சொர்க்கத்தில் இன்று தேவதைகளுடன் நீ பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருப்பாய் மகளே. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உனது வயது என்றைக்கும் கூடாது. என்னை வீட்டு தூரத்தில் இருந்தாலும் பத்திரமாய் இருப்பாய் என்று எனக்கு தெரியும். இன்றைக்கு கொஞ்சம் கூடுதலாக உன்னை மிஸ் பண்றேன். ஐ லவ் யூ – மிஸ் யூ” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சித்ராவுக்கு அவரது ரசிகர்களும் திரைத்துறையினரும் அவரது பதிவில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Bigg Boss Tamil 7: பேச்சுவார்த்தை போதும்.. பூர்ணிமாவிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்ட மாயா.. பிக்பாஸில் இன்று!