வைரமுத்து பாட்டு எழுதியுள்ளதால் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படத்தை பார்க்க மாட்டேன் என பிரபல பின்னனி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். 


நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ளது “மகாராஜா”. இப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படத்தில் மம்தா மோகன் தாஸ், அபிராமி, திவ்ய பாரதி, நட்டி, சிங்கம் புலி, அருள் தாஸ், முனீஷ்காந்த், அனுராக் காஷ்யப், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் மகத்தான சாதனைப் படைத்திருந்தது. 


இதனிடையே இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்நிலையில் வைரமுத்து பாடல் எழுதியதற்காக மகாராஜா படத்தை பார்க்க போவதில்லை என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். 






இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லை பற்றி பேசும் படமாக வெளியாகியுள்ள மகாராஜாவில் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பதை அறிந்து நான் வருத்தப்பட்டேன். பிடித்தமான ஒருவரை துஷ்பிரயோகம் செய்பவர் என சொன்னதால், சொன்னவரை வேலை செய்யவிடாமல் தடை செய்வது தமிழ் சினிமாத்துறை மட்டும் தான். 


நான் அந்த படத்தை பார்க்க நினைக்கவில்லை. அந்த படத்தை பார்த்து கருத்து கூறியதற்காக பத்திரிக்கையாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டார் என்பதை நான் அறிந்தேன்.தமிழ் சினிமாவில் சக்தி வாய்ந்தவர்கள் சிறப்பாகச் செய்வார்கள் அல்லது சரியானதைச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் மீண்டும் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. ஏதாவது ஒரு கட்டத்தில் பழிவாங்கல் கூட இருக்கும் என்பதை உணரும் போது ஆச்சரியமாக இருக்கிறது. 


துஷ்பிரயோகம் செய்பவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மற்றும் பாலியல் குற்றவாளிகளை ஊக்குவிக்கும் ஒவ்வொருவரும் பல மடங்கு அதற்கான பலனை அனுபவிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.