என்ன தான் ரஜினி, கமல், விஜய், சூர்யா என அடுத்தடுத்து பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியாக தயாராக இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி சக்கைபோடு போட்ட படங்கள் தற்போது மேம்பட்டடுத்தப்பட்ட தரத்துடன் புதிய பொலிவு பெற்று இன்றைய காலகட்டத்திற்குகேற்ப ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரீ ரிலீஸ் படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் விஜய்யின் 'கில்லி' ஏற்கனவே வெளியாகி மாஸ் காட்டியதை தொடர்ந்து அவரின் பிறந்தநாளை முன்னிட்டு போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை வசூலையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக வரும் ஜூலை 23-ஆம் நடிகர் சூர்யா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு அவரின் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்:
அயன் :
2009ம் ஆண்டு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, ஜெகன், பிரபு உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் ஈட்டியது.
காக்க காக்க :
2003ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் படமாக இது பார்க்கப்படுகிறது.
சிங்கம் :
2010ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், பிரகாஷ்ராஜ், ராதாரவி, மனோரமா, விவேக் என மிக பெரிய திரை நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படம் தெறிக்க விடும் வெற்றியை பெற்றது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவே நகர்ந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி பெற்றது.
கஜினி :
2005ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா,மனோபாலா மற்றும் பலரின் நடிப்பில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இப்படம் ஒரு அனல் தெறிக்கும் வெற்றியை பெற்றது. தமிழில் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து இந்தியிலும் ரீ மேக் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.
வாரணம் ஆயிரம் :
2008ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன், திவ்யா ஸ்பந்தனா, சமீரா ரெட்டி மற்றும் பலரின் நடிப்பில் வெளியான இப்படம் பட்டையை கிளப்பும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்று வரை ட்ரெண்டிங்காக இருக்கும் பாடல்கள்.
நடிகர் சூர்யாவின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமானதாக அமைந்த படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.