நந்தமூரி பாலகிருஷ்ணா - அஞ்சலி வைரல் வீடியோ


தெலுங்கில் விஷ்வக் சென், அஞ்சலி, நேஹா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி” படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நந்தமூரி பாலகிருஷ்ணா (Nandamuri Balakrishna) பங்கேற்றார். நிகழ்ச்சியில் மேடையேறிய பாலகிருஷ்ணாவுக்கு அருகில் நேஹா ஷெட்டியும், அதனைத் தொடர்ந்து அஞ்சலியும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அஞ்சலியை சற்று நகர்ந்து நிற்குமாறு சைகை செய்தார். இரண்டு முறை சொல்லியும் அஞ்சலி சில அடிகள் மட்டுமே நகர்ந்தார். இதனால் கடுப்பான பாலகிருஷ்ணா, அவரைப் பிடித்து தள்ளி விட்டார். இதனை சற்றும் எதிர்பாராத அஞ்சலி (Anjali) தனது பதற்றத்தை மறைத்துக் கொண்டு சிரித்து அந்த சூழலை இலகுவாக்கினார். 


இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவ பாலகிருஷ்ணாவின் இந்தச் செயலை பலர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.  உடனே கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் தயாரிப்பாளர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இந்த நிகழ்வு தொடர்பாக விளக்கமளித்தார். பாலகிருஷ்ணா எதார்த்தமாக தான் அஞ்சலியைத் தள்ளிவிட்டதாக அவர் தெரிவித்தார். 


அஞ்சலியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்






மற்றொரு பக்கம் இந்த வீடியோவை பகிர்ந்த ஒரு சிலர் இந்த வீடியோவில் அஞ்சலியைத் தள்ளிவிட்டபோது அவர் ஏன் சிரிக்க வேண்டும் அவர் உடனே ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று அவரைக் குறைசொல்லி வருகிறார்கள். இதனை சுட்டிக்காட்டி பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்தப் பதிவில் “நீங்கள் உங்கள் ஃபோனில் உட்கார்ந்து இந்த வீடியோவை பார்த்துக் கொண்டு நீங்கள் எதிர்பார்ப்பது போல் ஒருவர் செயலாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். பலமான அரசியல் மற்றும் சாதிய பின்புலத்தில் இருந்து வரும் ஆண்கள் தங்கள் பொறுப்புகளை செய்யாவிட்டால், அவர்களை இந்த சமூகம் எந்த கேள்வியும் கேட்பதில்லை.  இழப்பதற்கு எதுவுமில்லாதவர் ஒரு பெண் எந்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என்று பாடம் எடுக்காதீர்கள்” என்று சின்மயி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்