தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலை ஊராட்சியில் 63 மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த மலை கிராமங்களில் முழுவதும் மலைவாழ் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட அரசநத்தம், கலசப்பாடி, காட்டுவளவு, ஆலமரத்துவளவு உள்ளிட்ட ஒன்பது கிராமங்கள் வாச்சாத்தி கிராமத்திற்கு அருகில் உள்ள மலையில் உள்ளன. இந்த மலை கிராமத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லாமல், மண் சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் பல்வேறு இடங்களில் கொண்டும் குழியுமாக, மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்களாக இருந்து வருகின்றன.
இந்த சாலையை மலை கிராம மக்கள் அன்றாடம் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஒரு அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட வழியில்லாமல், இந்த மலை கிராம மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சாலையே சரியாக இல்லாத நிலையில் மலையின் நடுப்பகுதியில், நழுக்கு பாறை என்னுமிடத்தில் சாலையின் குறுக்கே காட்டாறு ஒன்று, சாலையின் குறுக்கே செல்கிறது. இந்த மலை கிராமங்களில் மழைக் காலங்களில் ஒரு மணி நேரம் மழை பொழிந்தால் கூட, இந்த காற்றாற்று வெள்ளம் ஏற்படுகிறது. இதனால் நாளுக்கு பாறை பகுதியில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு, சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது. இந்த காற்றாற்று வெள்ளம் வடிவதற்கு மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. மேடம் ஆறு மாத காலம் இந்த காற்றாற்று தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மலையில் இருந்து கீழ் இறங்கவும் முடிவதில்லை. அதேபோல் கீழிருந்து மழை மீது செல்ல முடிவதில்லை.
இதனால் நடுவழியில் சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும் மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல வேண்டும் என்றால், காட்டாற்று வெள்ளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்களில் வருவதும், இக்கரையில் இருந்து அக்கறைக்கு கயிறு கட்டி அதனைப் பிடித்துக் கொண்டு ஆபத்தான முறையில் காட்டாற்று வெள்ளத்தைக் கடக்கின்றனர். அவ்வாறு கிடைக்கின்ற பொழுது கொஞ்சம் சறுக்கினாலும் கூட, வெள்ளத்தில் அடித்துச் செல்லும் நிலை இருந்து வருகிறது. இந்த நாழுக்கு பாறையிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில், காட்டாறு சுமார் 100 அடி உயரத்திலிருந்து பாறைகள் மீது அருவியாக குதிக்கிறது. இதில் இரு சக்கர வாகனமோ, மனிதர்களோ சறுக்கினால், 100 அடி பள்ளத்தில் பாறைகளின் மீது விழுந்து அடையாளம் தெரியாத அளவில் நெருங்கி விடும் அபாயம் இருந்து வருகிறது.
மேலும் ஒவ்வொரு முறை மழை பெய்தால் கூட காட்டில் வரும் தண்ணீர் சுமார் 6 மாதங்களுக்கு குறைவதில்லை. இதனால் தினந்தோறும் இந்த மக்கள் தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் வாச்சாத்தியில் இருந்து, அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு முறையான சாலை வசதி இல்லாத நிலையில், காட்டாற்று வெள்ளம் வருவதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த மலை கிராமங்களுக்கு முறையான சாலை வசதி அமைத்து கொடுப்பதற்கு முன்பாக, இந்த நழுக்கு பாறை அருகே உயர்மட்ட பாலம் அமைத்துக் கொடுத்து, மழை காலங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்காமல் மலை கிராம மக்கள் சென்று வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை தொடர்பு கொண்டு கேட்டபோது, “பாப்பிரெட்டிபட்டி ஒன்றியம் சித்தேரி மலை ஊராட்சியில் உள்ள அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு வாச்சாத்தியில் இருந்து 8 கிலோமீட்டர் சாலை அமைப்பதற்காக வனத் துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த எட்டு கிலோமீட்டர் சாலை மற்றும் நழுக்கு பாறை அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு 12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் என்பதால் இந்த பணி தொடங்காமல் இருந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாச்சாத்திலிருந்து அரசநத்தம், கலசப்பாடி மலை கிராமங்களுக்கு புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.