ஜம்மு காஷ்மீரில் 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் கூறுகையில், “இந்த பேருந்து சுமார் 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 21 பேர் உயிரிழ்ந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தனர். 


ஜம்மு காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, உயிரிழ்ந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தளத்தில், “ஜம்முவின் அக்னூரில் பேருந்து விபத்து இதயத்தை உலுக்குகிறது. உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, ஈடு செய்ய முடியாத இழப்பைத் தாங்கும் சக்தியை அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்காக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 






விபத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார், அதில் தெரிவித்ததாவது, "ஜம்மு-காஷ்மீரின் அக்னூரில் 21 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர். இந்த பயங்கர பேருந்து விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும், இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ வேண்டும் எனவும் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.