சமந்தா, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி திரைப்படத்தின் ட்ரெயலர் வெளியீட்டு விழாவில்  சமந்தாவை புகழ்ந்து அவருக்காக பாடல் பாடி அசத்தியிருக்கிறார் பாடகி சின்மயி.

குஷி

சமந்தா விஜய் தேவரகொண்டா  இரண்டாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் குஷி திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 9-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இஸ்லாமிய பெண் என சமந்தாவை நினைத்து  அவருடன் காதலில் விஜய் தேவரகொண்டா விழும் நிலையில், அவர் ஒரு பிராமண வீட்டுப் பெண் எனத் தெரிய வருகிறது. தொடர்ந்து பல சிக்கல்கள், எதிர்ப்புகளை மீறி இருவரும் திருமணம் செய்துகொள்ளும் நிலையில், காதல் வாழ்க்கையில் ஜெயித்ததுபோல், திருமண வாழ்க்கை இவர்களுக்கு இனிமையாக அமைந்ததா? என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்படம் அமைந்துள்ளது.

ஷிவ நிர்வாணா இப்படத்தை இயக்கி  சச்சின் கெதெக்கர், ராகுல் ராமகிருஷ்ணா, லக்‌ஷ்மி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

பரபரப்பான ப்ரோமோஷன்

வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படுதீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள் படக்குழுவினர்.  

இப்படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், பட ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நடிகை சமந்தாவும்  - விஜய் தேவரகொண்டாவும் பல மேடைகளில் தெலுங்கு ரசிகர்களின் முன் ப்ரோமோஷன் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மேடையில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடனமாடியது படு வைரலாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் தற்போது சமந்தா பற்றி பாடகி சின்மயி சொன்ன வார்த்தைகளும் சமந்தாவுக்காக அவர் பாடிய பாடல்களும் இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளன.

ஒரு தெய்வம் தந்த பூவே

சமந்தா குறித்து  பேசிய அவரது நெருங்கிய தொழியான  சின்மயி  “ஏராளமானப் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நீங்கள் ஒரு நாயகியாக இருக்கிறீர்கள். இந்த உலகத்தில் நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த, மிக தைரியமான, மிக அழகான ஒரு நபர் நீங்கள். யார் என்ன சொன்னாலும் இது மாறப்போவதில்லை” என்று சொன்ன சின்மயி சமந்தாவிற்காக கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பாடினார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த சமந்தா அவரை இறுக அணைத்துக்கொண்டார்.