பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் சந்திரமுகி 2.


நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நடிகைகள் ஜோதிகா, நயன் தாரா ஆகியோர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடுபோட்ட சந்திரமுகி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியாகிறது.


நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் இப்படத்தில் வேட்டைய ராஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், கங்கனா ரனாவத் இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கிறார்.


வரும் செப்டெம்பர் 19ஆம் தேதி இப்படம் வெளியாகும் நிலையில், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே என பல நடிகர்களும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


முதல் பாகத்தில் முருகேசா... எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்து காமெடியில் கலக்கிய நடிகர் வடிவேலு, தற்போதைய இரண்டாம் பாகத்திலும் காமெடியனாக நடித்துள்ளார். இந்நிலையில், வடிவேலுவின் முருகேசன் கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்ய வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் தற்போது பகிர்ந்துள்ளது.


நடிகர் வடிவேலு ஸ்டுடியோவில் டப்பிங் பணிகளில் ஈடுபடும் நிலையில், நான் தான் சந்திரமுகியோட பெஸ்ட் ஃப்ரெண்ட் எனப் பேசுகிறார், அப்போது சந்திரமுகியின் குரல் திடீரென தோன்றி வடிவேலுவை ஜெர்க் ஆக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.


 






சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


முன்னதாக இப்படத்தின் ஸ்வாகதாஞ்சலி எனும் பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற சந்திரமுகிக்கான ‘ரா.. ரா..’ பாடலைப் போல், இந்தப் பாடல் இரண்டாம் பாகத்தில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஸ்ரீநிதி திருமலா இந்தப் பாடலை  பாடியுள்ள நிலையில், சைதன்யா பிரசாத் இப்பாடலை எழுதியுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளரான எம்.எம்.கீரவாணி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் சந்திரமுகி 2 படம் உருவாகியுள்ளது. மேலும், ஒரிஜினல் படமான மலையாள மணிச்சித்திரத்தாழு,  இந்தியில் பூல் புலைய்யா,   என பல மொழிகளில் இப்படம் உருவாகியுள்ள நிலையில்,  பான் இந்தியா ரசிகர்களை இப்படம் திருப்திப்படுத்துமாக என சினிமா வட்டாரம் எதிர்பார்த்துக் காத்துள்ளது.