சங்கீத கலாநிதி விருது


கர்நாடக சங்கீத இசை உலகின் உயரிய விருதான 'சங்கீத கலாநிதி' இந்த ஆண்டு பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு சங்கீத உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.எம் கிருஷ்ணாவுக்கு இந்த விருதை அறிவித்ததற்கு எதிராக முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்களான காயத்ரி மற்றும் ரஞ்சனி  தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.


மேலும் 2024ஆம் ஆண்டிற்கான இசை கருத்தரங்கத்தில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்கள். சமூக நீதி உள்ளடக்கிய கருத்துக்களை டி.எம் கிருஷ்ணா பேசிய காரணத்தினால் அவருக்கு எதிராக இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து பாடகர் சின்மயி டி.எம். கிருஷ்ணாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்ததோடு ரஞ்சனி மற்றும் காயத்ரியின் மீது ஒரு சில விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.


விளாசிய சின்மயி


இது குறித்து சின்மயி கூறியதாவது “ இந்த விஷயத்தில் கர்நாடக சங்கீதத் துறையைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பை தெரிவிப்பது போல, மீ டூ விவகாரத்தின் போது அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாததற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும்.


ரஞ்சனி மற்றும் காயத்ரி பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தங்களது அக்கறையை மட்டுமே அவ்வப்போது வெளிப்படுத்தினார்கள். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை ரஞ்சனி மற்றும் காயத்ரி டி.எம் கிருஷ்ணாவின் சில கருத்தியல்களோடு மாறுபடுகிறார்கள். ஆனால் இந்த விருது என்பது டி,எம் கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை.


இந்த நேர்காணலைப் பார்த்தபின் நிச்சயமாக அவர்கள் என்னைப் பார்த்துவிட்டு எனக்கு எதிராகவும் திரும்புவார்கள். இவ்வளவு பேசும் நான் நான் பாலியல் குற்றம் சுமத்திய ஒரு நபருக்கு விருது கிடைக்கும் போதும் இதே மாதிரி அமைதியாக இருக்கவேண்டுதானே என்று அவர்கள் கருத்து தெரிவிப்பார்கள். நான் பாலியல் குற்றம் சுமத்திய நபரின் மேலும் இன்றைய நாள்வரை 19 பெண்கள் அதே புகாரை அளித்துள்ளார்கள்.


அந்த மாதிரியான நபரால் என்னைப் போன்ற பெண்கள் தங்களது கரியரை இழந்து நிற்கிறார்கள். என்மீதான தடையை நான் இன்றுவரை எதிர்கொண்டு வருகிறேன். டி.எம் கிருஷ்ணா பெரியார் சாரின் கருத்துக்கள் மீது ஆர்வம் கொண்டிருக்கிறார் என்றால் அது அவரது தனிப்பட்ட விருப்பம் பெரியார் சார் இப்போது உயிருடன் இல்லை. அவருடைய கருத்துக்கள் சமூக அரசியலில் பரவலாக பேசப்படுகின்றன. இதில் இன்றைய நிலைக்கு தேவையான பல முக்கியமான கருத்துக்கள் இருக்கின்றன. 






'உங்கள் தொடையில் தாளம் போடுவார்கள்'


என்னுடைய சொந்த தாத்தா சங்கீத கலாநிதி பட்டம் பெற்றவர். நான் இசைத் தொடர்பான இப்படியான சூழல்களுக்கு நடுவில் தான் வளர்ந்தேன். கர்நாடக சங்கீதத் துறையில் இருப்பவர்கள் எப்படியானவர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் நன்றாக பாடுவதாக சொல்லி அவர்கள் தொடையில் தட்டுவதற்கு பதிலாக உங்கள் தொடையில் தாளம் போடக் கூடியவர்களும் அதற்குள் இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காமல் தான் அந்த அமைப்பு தொடர்ந்து வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.