சங்கீத கலாநிதி விருது பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் எதிர்ப்புகள் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி  விருது


கர்நாடக சங்கீத இசை உலகின் உயரிய விருதான 'சங்கீத கலாநிதி' இந்த ஆண்டு பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக பல முன்னணி இசைக்கலைஞர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். மேலும் சங்கீத அகாடமியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் டி.எம் கிருஷ்ணாவுக்கு ஆதரவாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமூக நீதி பார்வைதான் இவர்களின் பிரச்சனை


கர்நாடக சங்கீத இசை உலகின் உயரிய விருதான 'சங்கீத கலாநிதி' இந்த ஆண்டு பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு சங்கீத உலகத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறது.



கிருஷ்ணா "மிகப்பெரிய ஞானஸ்தன்; அபாரமான கலைஞர்" என ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்கிற சங்கீத உலகம் இந்த விருது விஷயத்தில் இரண்டாகப் பிரிகிறதென்றால் அது இசையின் அடிப்படையில் அல்ல என்பது தெளிவாகிறதுதானே?

 

வேறென்ன பிரச்சனை? அவருடைய சமூகநீதிப் பார்வையும், அதைப் பளீரென்று உரத்த குரலில் அஞ்சாமல் சொல்லும் இயல்புந்தான். கடந்த சில ஆண்டுகளாக அவர் முன்னெடுத்து வரும் சில கோட்பாடுகள்தான் காரணம்."சபாக்களில் பிராமண ஆதிக்கம் இருக்கிறது; அதைக்களைய வேண்டும். சாஸ்திரீய சங்கீதத்தை வெகுஜனத்துக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்." என்று அவர் வெளிப்படையாகக் சொன்னதுதான் இசை உலகத்தில் பெரிய பூதத்தைக் கிளப்பிவிட்டு, பாரம்பரியத்தை உலுக்கி, பலரது சினத்தைத் தூண்டியது.



 

யாரை மேல்மட்டச் சமூகம் தீண்டாமல் ஒதுக்கிவைத்ததோ அவர்களோடு சேர்ந்து ஆல்காட் குப்பத்திலும், சேரிகளிலும் கர்நாடக இசையை எளிமைப்படுத்திப் பாடினார். மூன்றாம் பாலினத்தவரோடு சேர்ந்து ஒரு கச்சேரி நடத்தினார். இதைப்போல பல கலை-கலாச்சாரப் புரட்சிகளைத் தொடர்ந்து செய்கிறார். 21-ம் நூற்றாண்டு பாரதியைப் பார்ப்பது போல் இருக்கிறதா? இவரும் பிராமணர்தான்!

 



ஆனால் பிராமணியத்தின் தவறான சில பகுதிகளைக் களைய முயற்சிக்கிறவர். இன்றைய சங்கீத உலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் டி.எம். கிருஷ்ணா தலைமையில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கிற இசை விழாவைப் புறக்கணிப்பதாக நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் புகழ்ந்து பேசியிருக்கிறாராம். அதனால் அவர் ரொம்ப ஆபத்தானவராம். பாடகி சின்மயி இவர்களது அறிக்கைக்கு எதிர் அறிக்கை விட்டிருக்கிறார்.

 



"ஆன்மீகத்தின், சங்கீத உலகத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்று இப்போது கொதிக்கிறீர்களே... இதே சங்கீத உலகில் பல பெரிய மனிதர்கள், வித்வான்கள் தங்களிடம் இசை பயில வரும் பல குழந்தைகளின் கற்பை சூறையாடுகிறார்கள், காப்பாற்றுங்கள் என்று 'Me Too' இயக்கத்தில் நாங்கள் குரலெழுப்பி கூக்குரலிட்டபோது எதுவுமே நடக்காதது போல அமைதி காத்தீர்களே. அப்போது உங்கள் பொறுப்பும், அக்கறையும் எங்கே போனது?" என்று கேட்டிருக்கிறார்.