திரைப்பட நடிகையாகத் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் அறிமுகமாகிறார் பாடகி சின்மயி. தனது கணவர் ராகுல் ரவீந்திரன் நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சின்மயி. Most Eligible Bachelor என்று இந்தப் படத்திற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ரியல் வாழ்க்கையில் காதல் ஜோடிகளாக இருக்கும் ராகுல் ரவீந்திரனும், சின்மயியும் இந்தப் படத்தின் மூலம் ரீல் வாழ்க்கையிலும் காதல் ஜோடிகளாக இருக்கப் போகிறார்கள். இந்தப் படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகார்ஜுனா - அமலா அக்கினேனி தம்பதியின் மகன் அகில் அக்கினேனி நாயகனாகவும், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நடித்துள்ளனர். 


இதுகுறித்து பேசிய ராகுல் ரவீந்திரன், “சின்மயிக்குப் பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. எனினும் அவற்றைத் தொடர்ந்து மறுத்து வந்தார். ஆனால் சமீபத்தில் அவரிடம் நானும் அவரும் கணவன் மனைவியாக நடிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூற, அவரும் ஆர்வத்தோடு சம்மதித்தார். மேலும், வெண்ணிலா கிஷோர் நடிக்கும் படத்தில் நடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியும் கொண்டிருக்கிறார்’ என்று கூறியுள்ளார். 



ராகுல் ரவீந்திரன் - சின்மயி


ராகுல் ரவீந்திரன் தமிழில் ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர். ’விண்மீன்கள்’, ’சூரிய நகரம்’, ‘வணக்கம் சென்னை’ ஆகிய தமிழ்ப் படங்களிலும், பல்வேறு தெலுங்கு படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். அவர் தெலுங்கு மொழியில் இயக்கிய ‘சி லா சௌ’ படமும், நாகார்ஜூனா ஹீரோவாக நடித்த ‘மன்மதுடு 2’ படமும் வெற்றிப் படங்களாக இருப்பவை. மேலும், ‘சி லா சௌ’ படத்திற்காக, 2018ஆம் ஆண்டின் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதும் பெற்றிருக்கிறார் நடிகர் ராகுல் ரவீந்திரன். சில ஆண்டுகள், நடிப்பில் இருந்து விலகி, இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்த ராகுல் ரவீந்திரன், தற்போது மீண்டும் நடிப்பில் இறங்கியிருக்கிறார்.


சின்மயியுடன் திரைப்பட ஷுட்டிங்கிற்குச் சென்ற அனுபவம் வித்தியாசமாக இருந்ததாகவும், செட்டில் தன் மனைவியோடு நேரம் செலவழித்தது உற்சாகம் அளித்தது என்றும் ராகுல் கூறியுள்ளார்.



ராகுல் ரவீந்திரன் - சின்மயி


 


“சின்மயி விளம்பரப் படங்களிலும், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் ஏற்கனவே தலைகாட்டியிருந்தாலும், திரைப்படத்தில் நடிப்பதற்கு முதலில் தயக்கம் காட்டினார். ஆனால், அகில் அக்கினேனி, இயக்குநர் பாஸ்கர் ஆகியோர் சின்மயிக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, நன்றாக கவனித்துக் கொண்டனர். இறுதியில், அவரது வேடத்தை மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார் சின்மயி. அவர் என்னை விட நல்ல நடிகர் என்று நினைக்கிறேன்’ என்று சின்மயியின் திரைப்பட அனுபவம் குறித்தும் பேசியுள்ளார் அவரது கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன். 


‘Most Eligible Bachlelor' படம் அடுத்த ஆண்டு கோடைக்கால விடுமுறைகளின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.