தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கரூப்பூரிலுள்ள சின்னகருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் கொரநாட்டுக்கரூப்பூர், சின்னக்கரூப்பூர், சத்திரம் கருப்பூப் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். இச்சங்கத்தில் கொரநாட்டூக்கரூப்பூரில் முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பகவதி என்பவர் தலைவராகவும், 11 பேர் சங்கத்தின் இயக்குனர்களாக உள்ளனர். பகவதி என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக தலைவராக பொறுப்பு வகித்து வருகின்றார்.


இச்சங்கத்தில், விவசாயிகளுக்கு தேவைப்படும் உரம், நெல் விதைகள், இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த பொருட்கள் வழங்கப்படுகிறது. இதே போல் விவசாயிகள் சாகுபடி செய்வதற்கான பணத்திற்கு நகைகளை அடமானம் வைப்பது, கடன், விவசாய கடன்கள், நிலத்தை வைத்து அடமானம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அச்சங்கத்தின் வரவு செலவு அதிகமாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், இச்சங்கத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு செயலாளராக இருந்த கிருஷ்ணமூர்த்தி  உடல்நலக்குறைவு காரணமாக திடீரென இறந்து விட்டார்.  இதனையடுத்து நிர்வாகிகள் மற்றும் இயக்குனர்கள், அச்சங்கத்தில் சேல்ஸ் மேனாக இருந்த சீனிவாசன் என்பவரை செயலாளராக நியமிக்க ஒரு மனதாக முடிவெடுத்தனர். அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் செயலாளராக நியமனம்  செய்ய முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் சீனிவாசன், சங்கத்திலுள்ள வரவு செலவு கணக்குகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார்.


அப்போது சங்கத்திலுள்ள நிர்வாகிகள் வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தனர். அப்போது, சீனிவாசன் மற்றும் அலுவலர்கள், கணக்குகளை சரி பார்த்த போது, சுமார் 4 லட்சத்திற்கு மேல் பணம் குறைந்ததுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சீனிவாசன், செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ளாமல், வரவு செலவு கணக்குகள் சரி செய்த பிறகு செயலாளராக பதவியேற்றுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.


இது குறித்து சங்கத்திலுள்ள நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள், மாவட்ட அதிகாரிகளிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தஞ்சை கூட்டுறவுத்துறையின் இணை பதிவாளர் மனோகரன் தலைமையில், மூன்று கூட்டுறவுத்துறையின் சார் பதிவாளர்கள் திடீரென விசாரணை நடத்தினர். அதில், ரொக்கமாக 2,87,000 ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்கான தொகை ரூபாய் 1,94,000 ஆக மொத்தம் ரூபாய் 4,81,000 மற்றும் உரங்களை ரசீது இல்லாமல் விற்பனை செய்தது போன்ற பல்வேறு முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்ததுள்ளது.


இது குறித்து கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் மனோகரன் கூறுகையில், சின்னகரூப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் எழுந்துள்ள புகார் குறித்து விசாரித்து வருகின்றோம். அதற்குண்டான விசாரணை நடந்து வருகின்றது. விசாரணை முடிந்த பிறகு அடுத்த கட்ட முடிவெடுக்கப்படும் என்றார். கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டூக்கரூப்பூரிலுள்ள சின்னக் கரூப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றுள்ள முறைகேடால், அதிமுகவினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது போன்றுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் உடனடியாக, தனி குழு அமைத்து, வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.