மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு புது உணர்வை தருகிறது. சிலருக்கு இது பெரிய தொல்லையாக இருக்கும், சிலருக்கு எந்த வித மாற்றமும் இல்லாமல், சாதாரணமாக கடந்து செல்வார்கள், எதுக்கு இப்படி வந்து இம்சை பண்ணுது? என இப்படி பல்வேறு உணர்வுகளை இந்த நாட்கள் கொண்டிருக்கும். இந்த நாட்களை வெறும் சம்பிரதாயாகமாகவும் கடந்து செல்வார்கள். இதை சுற்றி நிறைய கட்டுக்கதைகளும், நிறைய தடைகளும் விதிப்பார்கள். இப்படி இருக்க வேண்டும், அதை தொடக்கூடாது என்பார்கள். மேலும், வீட்டில் ஒரு மூலையில் 3 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் வழக்கம் கூட இன்னும் பல கிராமங்களில் நடக்கிறது.




மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு பெண்ணின் ஆரோக்கியம் சார்ந்த ஒரு விஷயம். இந்த சுழற்சி சரியாக இருந்தால் மட்டுமே, கருவுறுதல் எளிமையாக நடக்கும். பொது ஆரோக்கியமும் சீராக இருக்கும். ஏனென்றால் மாத விடாய் சுழற்சியானது, பெண்ணின் ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடையது. சிலருக்கு ஓரிரு நாட்கள் தள்ளி போனாலும், ஏன் இன்னும் பீரியட்ஸ் வரவில்லை என கேள்வி வந்து வந்து செல்லும். தொடர்ந்து 3- 7 நாட்கள் வரை இரத்தப்போக்கு இருக்கும். இந்த நாட்களில், நீங்கள் இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்.





  1. உடலை வருத்தி வேலை செய்யாதீர்கள் - மாதவிடாய் நாட்களில் உடலும், மனதும், சோர்வாக இருக்கும். அந்த நேரங்களில், கடினமாக வேலைகளை செய்யாதீர்கள். போதுமான ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். இரத்தப்போக்கு அதிகமான இருக்கும் நேரங்களில், வழக்கத்திற்கு மாறாக  உடல் சோர்வடையும். அதற்கு தகுந்தாற்போல் வேலைகளை பிரித்து கொள்ளுங்கள். உடலை வருத்தி எந்த வேலைகளையும் செய்யாதீர்கள்

  2. உணவை தவிர்க்காதீர்கள் - இரத்த போக்கு இருக்கும் நாட்களில் சிலருக்கு எந்த உணவையும் சாப்பிட பிடிக்காது. அதனால் உணவை தவிர்த்து விடுவார்கள். ஆனால் இது போன்று செய்யாதீர்கள். ஏனென்றால், உடல் சோர்வாக இருக்கும் நேரங்களில் நீங்கள் உணவையும் தவிர்த்து விட்டால், உடல் மேலும் வலுவிழந்து விடும். அதனால் உணவை கட்டாயம் எடுத்து கொள்ளுங்கள். இரத்தப்போக்கை சமன்படுத்த காட்டாயம் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.




3.ஒரே நாப்கின் நாள் முழுவதும் பயன்படுத்தாதீர்கள் : சிலர் இரத்தப்போக்கு குறைவாக இருந்தால் நாப்கின் மாற்றாமல், நாள் முழுவதும், ஒரே நாப்கின் பயன்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறானது. குறிப்பிட்ட கால இடைவெளியில் நாப்கின் மாற்றுவது அவசியம். இதனால் தொற்று ஏற்படாமல் இருக்கும். ஒரே  நாப்கின் பயன்படுத்தினால் தொற்று ஏற்பட்டு, வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகள் வரும். நாப்கின் மாற்றுங்கள்.மாதவிடாய் சுழற்சி தவிர்க்கமுடியாத ஒன்று . பெண்ணாய் பிறந்த ஒவ்வொருவரும், இதை கடந்து செல்ல வேண்டும். அதனால் மாத விடாய் சுழற்சியின்போது ஏற்படும் சில அசெளகரியங்களை ஆரோக்கியமாக கையாளத் தெரிந்துகொண்டு மாற்றிக்கொள்ளுங்கள்.