கேல் கெடாட், ஆலியா பட் இணைந்து நடித்திருக்கும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. உலகத்தின் இரண்டு அழகான பெண்கள் ஒரே ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்து அதை நாம் பார்த்து விமர்சனம் சொல்லாமல் இருந்தால் எப்படி. இதோ அந்த விமர்சனம்.
மிஷன் இம்பாசிபிள் படத்தின் தயாரிப்பு குழு மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் இணைந்து வழங்கியுள்ள படம் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் (heart of stone). கால் கடோட், ஆலியா பட் ஜேமீ டோர்னன் ஆகியவர்கள் இந்த இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
கதைக்கு வருவோம்
பல்வேறு சீக்ரெட் ஆபரேஷன்களை செய்துமுடிக்கும் ஒரு எம்.ஐ.பி என்கிற குழுவில் பொத்தி பாதுகாக்கப்படும் ஒரு ஹேக்கராக இருந்து வருகிறார் கதையின் நாயகியான ஸ்டோன். ஆனால் இவருக்கு ரகசியம் அடையாளம் ஒன்றும் இருக்கிறது. சார்டர் என்கிற சுயாட்சி முறையில் இயக்கும் இயக்கத்தில் ஒரு அங்கத்தினராகவும் இருக்கிறார். இந்தக் குழுவில் இருப்பவர்களுக்கு எந்த வித அடையாமோ அரசியல் சார்போ கிடையாது . அவர்களின் உயிர்களுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. நண்பர்களோ பாசமோ எதுவும் வைத்துக்கொள்ளக் கூடாது. இந்தக் குழுவின் மிகப்பெரிய பலம் என்றால் ஹார்ட் என்கிற ஒரு கருவி.
இந்தக் கருவியை பயன்படுத்தி எந்த அரசை வேண்டுமானால் இவர்கள் கவிழ்க்கலாம். எந்த தொழில்நுட்பத்தை வேண்டுமானாலும் இருந்த இடத்தில் இருந்து கட்டுப்படுத்தலாம். இந்தக் கருவியை பயன்படுத்தி உலகத்தில் அமைதியை நிலைநாட்ட போராடுகிறார்கள் இந்த அமைப்பில் இருப்பவர்கள். ஒருவேளை இந்தக் கருவியை யாராவது திருடிக் கொண்டுபோனால் என்னவாகும்? அப்படியான நோக்கத்தில் வருகிறார் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கேயா (ஆலியா பட்). யார் இந்த கேயா? என்ன நோக்கத்துடன் அவர் இதனைச் செய்கிறார்? அவரது நோக்கம் நிறைவேறுகிறதா இல்லை அவரது நோக்கம் சரியானதுதானா? என்கிற கேள்வியை அவர் தன்னிடம் கேட்டுக்கொள்கிறாரா என்பதே மீதிக்கதை.
நம்பி பார்க்கலாமா ?
படத்தின் முதல் காட்சியில் இருந்து சுவாரஸ்யம் தொடங்கிவிடுகிறது. ஸ்டண்ட்காட்சிகளில் கேல் கெடாட் மாயாஜாலம் காட்டுகிறார். பொதுவாகவே இந்த மாதிரியான படங்களில் இருக்கும் ஒரு பெரிய சலிப்பு என்ன்வென்றால் கதாபாத்திரங்கள் அனைவருக்கும் தாங்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும் ஆனால் பார்வையாளர்கள் ஏதோ குத்துமதிப்பாக ஒன்றைப் புரிந்துகொண்டு படத்தை பார்க்க வேண்டிய கட்டயம் இருக்கும். ஆனால் இந்தப் படம் இந்த தடையை ஓரளவிற்கு கடந்திருக்கிறது என்று சொல்லலாம். ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. மேலும் சண்டைக் காட்சிகள் நம்மை பல இடங்களில் துள்ளி எழ வைக்கின்றன.
ஆலியா பட்
இந்தப் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை ஆலியா பட். பெரியளவில் அவருக்கு ஆக்ஷன் காட்சிகள் இல்லையென்றாலும் படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை கதையில் இருந்துகொண்டே இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேல் உண்மையான கதாநாயகி என்றால் கேல் கெடாட் தான். ஒவ்வொரு காட்சியிலும் தனது உடல்மொழியால் ஒரு ஆக்ஷன் படத்திற்கு தேவையான என்ர்ஜியை தக்கவைத்துக்கொண்டே இருக்கிறார்.
ஒரு ’க்’ வைக்காமல் எப்படி
எளிதில் யூகிக்கக் கூடிய இந்த கதையைக் காப்பாற்றுவது ஒரு சில திடீர் திருப்பங்களும் கிராஃபிக்ஸ் காட்சிகளின் புதுமையும் தான். இரண்டாம் பாதியில் இருந்து க்ளைமேக்ஸை நோக்கி சற்று வேகமாக ஓடிச்செல்கிறது. உணர்ச்சிகளற்ற ஒரு சீக்ரெட் ஏஜெண்டாக இருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் உணர்ச்சிகளை சேர்த்திருக்கலாம். மற்றபடி ஒரு நல்ல ஆக்ஷன் த்ரில்லர் அதுவும் உலகின் இரு அழகான பெண்கள் நடித்திருக்கும் ஒரு ஆக்ஷன் த்ரில்லரை பார்க்காமல் இருப்பதற்கு உங்களுக்கு எந்த தடையும் இல்லை.