தொப்பி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் பவர் ஸ்டார் ,தன்னை சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு , சம்பளங்களை கொடுப்பதில்லை என குற்றம் சாட்டியிருந்தார். நாங்கள் வியர்வை சிந்தி சம்பாதிக்கிறோம் , சில சமயங்களில் கயிறு கட்டி தொங்க விடுகிறார்கள் . அப்படி சம்பாதிக்கும் பணத்தை தராமல் தொப்பி வைத்து விடுகிறார்கள் புதிய தயாரிப்பாளர்கள் என்றார். இதனால் ஆத்திரமடைந்த இயக்குநரும் , நடிகருமான சிங்கம் புலி மேடையில் பவர் ஸ்டாரை கடுமையாக சாடினார். சிங்கம் புலி ரெட், மாயாவி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் . இது தவிர பேரழகன் , ரேணிகுண்டா உள்ளிட்ட படங்களில் வசனம் எழுதியுள்ளார். இது தவிர பல படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேடையில் பவர் ஸ்டார் சீனிவாசனை எதிர்த்து பேசிய சிங்கம் புலி "பவர் ஸ்டார போய் இளம் கதாநாயகன்னு என்னவோ சொன்னீங்க நீங்க..பவர் ஸ்டார் சொன்னாரு அழைச்சிட்டு போராக..சாப்பாடு போடுறாக..கயத்துல தொங்க விடுறாக.. கஷ்டப்படுறோம்.. உண்மைய சொல்லுங்க ..நாம கஷ்டமா படுறோம்..தயாரிப்பாளர்தான் கஷ்டப்படுறாங்க. ஜெனரேட்டர் பின்னால உக்காந்து இரவு நேரத்துல பணம் எண்ணுறாங்களே அந்த பணம் எப்படி வந்தது தெரியுமா உங்களுக்கு? , ஆர்ட் டேரக்டர்க்கிட்ட இருந்து ஏடிஎம் கார்ட் வாங்குனது தெரியுமா ? ஷூட்டிங் நான்கு நாட்கள் நீடித்தால் தயாரிப்பாளரின் பிரேஸ்லெட் காணாம போயிருக்கும் .அமெரிக்கா சினிமாக்களில் எல்லாம் முன்னதாகவே டெப்பாசிட் கட்டி அழைத்துவருவதெல்லாம் கிடையாது. இருந்தாலும் ஷூட்டிங் செல்வார்கள் ..நம்பிக்கைதான்..காசு வைத்திருந்தால் ஜெயிக்க முடியுமா ? நான் 50 கோடி கொடுக்கிறேன்..எங்க ஜெயிச்சுட்டு போங்களேன்..நல்ல கதை இல்லாமல் , திறமை இல்லாமல் காசு மட்டும் இருந்தால் யாராலும் ஜெயிக்க முடியாது. தயாரிப்பாளர் கூட நம்பிக்கையில்தான் படம் எடுக்கறாங்க.காசு கொண்டு வந்தாதான் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்னும் தியேரியை விட்டுவிடுங்கள் . திறமைதான் ஜெயிக்கும்.” என்றார்.
அதன் பிறகு பேசிய தயாரிப்பாளர் சிவா “ சிங்கம் புலி அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . நான் என்ன பேச நினைத்தேனோ அதை அவரே பேசிவிட்டார். சாதாரண சீனிவாசனை , பவர் ஸ்டார் சீனிவாசனாக மாற்றிய இந்த சினிமா , உங்களுக்கு கிரீடமும் வைக்கும் தொப்பியும் வைக்கும் இரண்டையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் . தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட மேடையில் , தயாரிப்பாளர்களை கிண்டல் செய்யும் அளவிற்கு இன்றைய சினிமா தரம் தாழ்ந்துவிட்டதுதான் வேதனையாக இருக்கிறது. ரஜினிகாந்தை உருவாக்கியதும் அதே தொப்பி வைக்கிற தயாரிப்பாளர்தான்.விமல் , விஜய் சேதுபதுபதியை உருவாக்குவதும் அதே தொப்பி வைக்கும் தயாரிப்பாளர்தான். இன்று உலகம் முழுவதும் உங்களை தெரியுமென்றால் அதற்கு காரணம் தயாரிப்பாளர்தான் .இனிமேல் மேடையில் நாகரீகமாக பேசிக்கொள்ளுங்கள் “ என்றார்