வெந்து தணிந்தது காடு படம் ரிலீசான நிலையில், அப்படத்தின் ஹீரோ சிலம்பரசன் நடிகர் கூல் சுரேஷூக்கு நன்றி தெரிவித்துள்ளார். 


விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்று தியேட்டர்களில் வெளியானது. 






வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று நள்ளிரவு முதலே சிம்புவின் ரசிகர்கள் தியேட்டர்களில் குவியத் தொடங்கினர். விடிய விடிய ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக காலை முதல் காட்சிக்காக காத்திருந்த நிலையில், இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. 


மேலும் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் சிம்பு, கௌதம் மேனனுக்கு கம்பேக் கொடுக்கும் படமாக வெந்து தணிந்தது காடு அமைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர். இதனிடையே நேற்று இரவு படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகர் சிம்பு உட்பட படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். மேலும் வெந்து தணிந்தது காடு படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். 






பின்னர் ரசிகர்களை படம் பார்த்து விட்டு எப்படி இருக்கு என சொல்லுமாறு தெரிவித்த சிம்பு, இந்நேரத்தில் கூல் சுரேஷூக்கு மனதார நன்றி தெரிவிப்பதாக கூறினார். காரணம் அவர் தான் எங்கு சென்றாலும் வெந்து தணிந்தது காடு..சிம்புவுக்கு வணக்கத்த போடு  என படத்தின் பெயரை சொல்லி சொல்லி ப்ரோமோஷன் செய்தார் என தெரிவித்தார். இதேபோல் நடிகை  சித்தி இதானியும் படத்தின் புரோமோஷனுக்கு அவர் செய்யும் பணி மிகச்சிறப்பானது என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.